கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த வெள்ளி அன்று இரவு துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது. கனமழையால் ஏற்பட்ட மோசமான வானிலையே விபத்திற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. அதாவது 35 அடி ஆழத்தில் விழுந்து விமானம் பல துண்டுகளாக உடைந்தன. இதில் 18 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று விமானத்தின் கருப்புப் பெட்டி மற்றும் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவை மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் விமான விபத்துக்கான விசாரணை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த கருப்புப் பெட்டி விபத்துக்கான காரணம் குறித்து அறிவதற்கான மிக முக்கியமான ஆதாரம் ஆகும். இதில் பதிவாகியுள்ள விஷயங்கள் குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றன. விசாரணை ஆணையம் அளித்த தகவலின்படி, சிவில் விமான போக்குவரத்துத் துறை இயக்குநரகம் மற்றும் விமான பாதுகாப்புத் துறை ஆகியவற்றின் அதிகாரிகள் டெல்லியில் இருந்து நேற்று காலை கோழிக்கோடு சென்றடைந்தனர்.
சென்னையில் இருந்தும் ஒரு குழு சென்றுள்ளது. இதுபற்றி விசாரணையில் ஈடுபட்டுள்ள மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், மனிதத் தவறா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்று தற்போது தெரிவிக்க இயலாது. அனைத்து விபத்துகளும் பல்வேறு காரணிகளால் ஏற்படுகின்றன. கோழிக்கோடு விமான விபத்தைப் பொறுத்தவரை முக்கியமான காரணமாக கருதப்படுவது தரையிறங்கும் போது இருந்த மோசமான வானிலையே ஆகும். 8,000 அடி நீளமுள்ள ஓடுதளமானது போயிங் 737 விமானம் தரையிறங்க போதுமானது.
எனவே விபத்திற்கான காரணம் குறித்து விமானத்தின் பயண வரலாறு மற்றும் ஏடிசி மற்றும் விமானிகள் இடையிலான தகவல்தொடர்பு ஆகியவற்றை ஆய்வு செய்த பின்னரே தெரியவரும் என்றார். இந்த சூழலில் விமானத்துறை வல்லுநர்கள் பல்வேறு விஷயங்களை ஊகங்களாக கணித்துள்ளனர். ஓடுதளத்தில் தேங்கி நின்ற நீரால் விமானத்தின் சக்கரங்களுக்கு போதிய உராய்வு கிடைக்காமல் போயிருக்கலாம். டேபிள் டாப் வகையிலான ஓடுதளத்தில் ஆப்டிகல் இல்லூசன் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர். கடைசி நிமிடத்தில் ரன்வே-யை மாற்றியது விமானியின் முடிவாகவோ அல்லது ஏடிசி-யின் முடிவாகவோ இருக்கலாம்.
விமானத்தின் தரையிறங்கும் கியரில் பிரச்சினைகள் இருந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை இதுதான் பிரச்சினை என்றால் இதுபற்றி ஏடிசி யிடம் முறையாக தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படவில்லை. மோசமான வானிலை, காற்று, மோசமான ஏடிசி-யுடனான தகவல்தொடர்பு உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக டி.ஜி.சி.ஏ தலைவர் பாரத் பூஷன் தெரிவித்துள்ளார்.