ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் யோகாவை கொண்டு சேர்க்கும் வகையில் யோகா படித்த சுமார் 1.25 லட்சம் பேரை நியமிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக 350 நியூரோபதி மற்றும் இயற்கை மருத்துவர்ளை தேர்வு செய்து அவர்கள் பட்டியல் மத்திய ஆயுஷ் அமைச்கத்தற்கு அனுப்பி வைக்கப்பபட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து மாவட்டத்திற்கு ஒரு மருத்துவர் என 38 யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களின் பெயர் பட்டியல் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் கடந்த 18ம் தேதி முதல் காணொலியில் நடந்தது. இதில் நாடு முழுவதும் 350 மருத்துவர்கள் பங்கேற்றார்கள். கடைசி நாளான நேற்று காணொலி பயிற்சி வகுப்புகள் ஆரம்பித்த பின்னர் மத்திய ஆயுஷ் செயலாளர் ராஜேஷ் கோட்சே கலந்து கொண்டு இந்தியில் பேசியிருக்கிறார். அதில் கலந்து கொண்ட தமிழக மருத்துவர்கள் எங்களுக்கு இந்தி தெரியாது, நீங்கள் பேசுவது புரியவில்லை என்று கூறியிருக்கிறார்கள்.
அத்துடன் யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறை என்று உள்ள நிலையில் ராஜேஷ் கோட்சே யோகாவை மட்டும் பேசியதாகவும் இயற்கை மருத்துவத்தை பற்றி பேசவில்லை என்று கூறப்படுகிறது. தமிழக மருத்துவர்கள் இயற்கை மருத்துவதத்தை புறக்கணிக்கிறீர்களா என்றும் கேட்டுள்ளார்கள். அத்துடன் ஆன்லைன் வகுப்பு கமெண்ட் பாக்ஸில் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்றும் கூறியிருக்கிறார்கள்.
இதனால் கோபம் அடைந்த அதிகாரி ராஜேஷ் கோட்சே, இந்தி தெரியவில்லை என்றால் ஆன்லைன் வகுப்பில் இருந்து வெளியேறுங்கள் என்று கூறியிருக்கிறார். இதனால் அனைவரும் அவரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் 6 மணிக்கு முடிய வேண்டிய கூட்டம் 4 மணிக்கே முடிந்துவிட்டது.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மத்திய ஆயுஷ் செயலாளர் ராஜேஷ் கோட்சே விளக்கம் அளித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது:
அனைத்து மாநிலங்களிலிருந்தும் மாநில அதிகாரிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட யோகாவிற்கான முதன்மை பயிற்சியாளர்களுக்கான அதிகாரப்பூர்வ பயிற்சி திட்டம் இருந்தது. நான் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளையும் பயன்படுத்தினேன். இதற்கு முன்பும் இரு மொழிகளையும் நான் எப்போதும் பயன்படுத்தியிருக்கிறேன்
நிகழ்ச்சிக்கு தொடர்பில்லாத பலர் பங்கேற்றார்கள். அவர்கள் கூட்டத்திற்கு இடையூறு செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னை தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசுமாறு கேலி செய்தார்கள். இரு மொழிகளிலும் நான் பேசலாம் என்று முயற்சித்துக் கொண்டிருந்தபோது, அவர்கள் “ஆங்கிலம் மட்டும், ஆங்கிலம் மட்டும் என்று கூறிக்கொண்டே இருந்தனர். நான் ஆங்கிலத்தில் சரளமாக பேசியதில்லை, ஆனால் இரு மொழிகளிலும் பேச முயற்சிக்கிறேன் என்று கூறினேன். இதனை பின்பற்ற முடியாதர்கள் வெளியேறலாம்,” என்று தாழ்மையுடன் தான் தெரிவித்தேன். ஆனால் என்னுடைய பேச்சு மொழித்திணிப்பு என திரிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.