Wednesday, January 15, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாஇந்திய - சீன எல்லையில் ஆயுதங்களுடன் படைகள் குவிப்பு

இந்திய – சீன எல்லையில் ஆயுதங்களுடன் படைகள் குவிப்பு

புதுடில்லி

கிழக்கு லடாக் எல்லையில் உள்ள, பாங்காங் சோ ஏரி அமைந்துள்ள பகுதியில், சீனப் படைகளின் அத்துமீறல் தொடர்வதை அடுத்து, எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

இந்திய – சீன ராணுவத்தினர், சில நுாறு மீட்டர் இடைவெளியில், துப்பாக்கி, பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நேருக்கு நேர் குவிக்கப்பட்டுள்ளதால், சண்டை மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம், லடாக்கின் கிழக்கு பகுதி யில் அத்துமீறிய சீன ராணுவத்தினர், கடுமையாக தாக்கியதில், 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்; பலர் காயமடைந்தனர். இந்த மோதலில், சீன தரப்பில் எத்தனை பேர் இறந்தனர் என்ற தகவல் இல்லை. இதனால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க, இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சீன வீரர்கள், லடாக்கின் கிழக்கு பகுதியில், மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம், எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம், 29 மற்றும் 30ம் தேதி இரவுகளில், லடாக்கின் கிழக்கு பகுதிகளில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறலில் ஈடுபட்டு, தற்போதைய நிலையை மாற்ற முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் விரட்டியடித்தனர்.

பாங்காங் சோ ஏரியின் தெற்கு பகுதியில், சீன ராணுவத்தின் அத்துமீறலை தடுத்ததுடன், நம் நிலையை வலுப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அங்கு நிலவும் சூழலை சிதைக்க முயன்ற சீனாவின் நோக்கமும் தடுத்து நிறுத்தப்பட்டது. இரு நாட்டு ராணுவ அதிகாரிகளின் உயர்மட்ட கூட்டம் நடந்து வரும் வேளையில், கடந்த, 31ல், மீண்டும் சீன வீரர்கள் அத்துமீறலில் ஈடுபட்டனர். இதையடுத்து, எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

எல்லை நிலவரம் குறித்து, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், நேற்று முன்தினம் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி எம்.எம்.நரவானே, விமானப் படை தளபதி ஆர்.கே.எஸ்.பதவுரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இரண்டு மணி நேரம் நடந்த கூட்டத்தில், எல்லை கட்டுப்பாட்டு பகுதியில், சீனாவின் அத்துமீறலை எதிர்கொள்ளும் வகையில், நம் வீரர்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ள நிலைகளில், தங்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், பாங்காங் சோ ஏரியின் தெற்கு கரைப் பகுதியில், கூடுதல் படைகள் மற்றும் பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களை அதிக அளவில் குவிக்கவும், கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கிழக்கு லடாக்கில் இருந்து, 310 கி.மீ., தொலைவில் உள்ள, சீனாவின் ஹோட்டான் விமானப் படை தளத்தில், தொடர்ச்சி 3ம் பக்கம்’ஜே – 20′ போர் விமானங்களை, சீனா தயார் நிலையில் வைத்துள்ளதாக, தகவல் வெளியானது.இதையடுத்து, கிழக்கு லடாக்கில், விமானப் படை ரோந்து பணிகளை தீவிரபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இரு நாட்டு ராணுவ கமாண்டர் அளவிலான பேச்சு, மூன்று நாட்களாக தொடர்கிறது. ஆனாலும், அதில் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை என தெரிகிறது. ஒருபுறம் அமைதி பேச்சு நடைபெறும் நிலையில், இந்திய – சீனப் படையினர், துப்பாக்கி, பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன், சில நுாறு மீட்டர் இடைவெளியில், கிழக்கு லடாக் எல்லை கட்டுப்பாடு பகுதியில், நேற்று நேருக்கு நேர் குவிக்கப்பட்டனர். அப்பகுதியில், எந்த நேரத்திலும் சண்டை மூளும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments