Friday, April 19, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்கடன் தவணைகளுக்கும் வட்டி வசூலிப்பது கந்து வட்டிக்கு இணையானது - டாக்டர் ராமதாஸ்

கடன் தவணைகளுக்கும் வட்டி வசூலிப்பது கந்து வட்டிக்கு இணையானது – டாக்டர் ராமதாஸ்

சென்னை

வங்கிகளில் ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கும் வட்டி வசூலிப்பது கந்து வட்டிக்கு இணையானது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே உறுதியளித்தவாறு வட்டியை தள்ளுபடி செய்யும் நல்ல முடிவை எடுத்து தீர்ப்பளிக்கும் என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா லாக்டவுன் காலத்தில் வங்கிகளில் பெறப்பட்ட தனிநபர் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், கடன் அட்டை மீதான கடன் உள்ளிட்ட அனைத்துத் தவணைகளையும் செலுத்துவதில் இருந்து கால அவகாசம் அளிக்கப்பட்டது.இருப்பினும், கடனுக்கான வட்டியைச் சேர்த்து வசூலிக்கும்போது செலுத்த வேண்டிய தவணைக் காலம் அதிகரிப்பதோடு, கடன், வட்டி சுமையும் அதிகரிக்கும். இதைப் பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டினர். குறைந்தபட்சம் இந்தக் காலகட்டத்துக்கான வட்டியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆக்ராவைச் சேர்ந்த கஜேந்திர சர்மா என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையில் நீதிபதிகள் ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா அமர்வு இந்த மனுவை விசாரித்து வருகிறது.

மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வங்கித்துறை பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது எனத் தெரிவித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வங்கிகளில் ஒத்தி வைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்ய முடியாது என, திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கொரோனா பொது முடக்கத்தால் ஒவ்வொரு துறையும் பாதிக்கப்பட்டுள்ளது எனவும், பொருளாதாரத்தை புனரமைக்க போதிய திட்டங்கள் தேவை எனவும் அவர் தெரிவித்தார். வங்கிக் கடன்களைச் செலுத்துவதில் சில தளர்வுகள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் துஷார் மேத்தா தனது வாதத்தில் தெரிவித்தார்.

இந்த நிலையில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வங்கிக்கடன் ரத்து பற்றி பதிவிட்டுள்ளார்.

வங்கிகளில் ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருப்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. கடன்தாரர்களை பணம் காய்க்கும் மரமாக கருதாமல் அவர்களிடம் கருணை காட்ட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

வங்கிகளில் ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கும் வட்டி வசூலிப்பது கந்து வட்டிக்கு இணையானதாகும். இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே உறுதியளித்தவாறு வட்டியை தள்ளுபடி செய்யும் நல்ல முடிவை எடுத்து தீர்ப்பளிக்கும் என்று நம்புகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு வரும் 10ஆம் தேதி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. அப்போது வட்டிக்கு வட்டி வசூலிப்பதற்கு உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments