Saturday, April 20, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஉலகம்கொரோனா பரவல் - வட கொரியா - சீனா எல்லையில் கண்டதும் சுட உத்தரவு? -...

கொரோனா பரவல் – வட கொரியா – சீனா எல்லையில் கண்டதும் சுட உத்தரவு? – அமெரிக்கா அதிர்ச்சித் தகவல்

சீனா உடனான வர்த்தகத் தொடர்பில் முக்கியப் பங்குவகிக்கும் வட கொரியா, தங்கள் நாட்டில் கொரோனா தொற்று இல்லை என்று சொல்வது சந்தேகத்தை ஏற்படுத்தினாலும், கொரோனா பரவலைத் தடுக்க வட கொரியா எல்லையில் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்கா வெளியிட்டிருக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

அதிரடியான நடவடிக்கைகளுக்குப் புகழ் பெற்றவர் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன். சமீபத்தில் இவர் இறந்துவிட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகிவந்த நிலையில் திடீரென பொது விழாக்களில் பங்கேற்று, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அமெரிக்காவுடன் அணுசக்தி பேச்சுவாா்த்தை முடங்கிப்போயிருக்கும் சூழலில், அடுத்த காய்நகா்த்தலுக்காக கிம் ஜாங் உன் நேரம் பாா்த்திருப்பதாகவும், அதற்குக் காலம் கடத்துவதற்காகவே அவா் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, அறிக்கைகளை வெளியிடுவது போன்றவற்றைக் குறைத்திருப்பதாகவும் பரவலாகப் பேசப்பட்டுவந்தன.

அதேசமயம், அமெரிக்காவை நடுங்கவைக்கும் வகையில் `அதீத ஆற்றல் மிக்க’ ஆயுதத்தை அறிமுகப்படுத்தப்போவதாக கடந்த ஆண்டு மிரட்டிய வட கொரியா, 2020-ல் தனது ஏவுகணை சோதனைகளை வெகுவாகக் குறைத்துக்கொண்டு, சரிந்துவரும் பொருளாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறது.

இப்படி வட கொரியாவில் நடப்பவை குறித்து மா்மங்கள் தொடா்ந்து வரும் நிலையில், 2018-ல் அதிபர் கிம் ஜாங் உன்-ஐ, சிங்கப்பூரில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்தித்த முதல் சந்திப்பின்போதே, கிம் ஜாங் பற்றிய சில விஷயங்கள் தன்னிடம் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டதாகத் தெரிவித்தார்.

அந்தச் சந்திப்பு குறித்து, அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் பாப் வுட்வேர்டு (Bob Woodward), `ரேஜ்’ என்ற பெயரில் புத்தகம் எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்தப் புத்தகத்தில், தான் நினைத்ததைவிட பல விஷயங்களில் கிம் கில்லாடியாக இருந்ததாக ட்ரம்ப் ஆச்சர்யத்துடன் தெரிவித்திருப்பதோடு, அந்தச் சந்திப்பின்போது பல்வேறு முக்கியமான விஷயங்களைப் பற்றித் தன்னிடம் கிம் ஜாங் மனம்திறந்து பேசியதாக ட்ரம்ப் குறிப்பிட்டார் என பாப் வுட்வேர்டு எழுதியிருக்கிறார்.

முக்கியமாக, தனக்கு எதிராகச் செயல்பட்ட மாமாவுக்கு மரண தண்டனை கொடுத்து, சுட்டுக் கொன்றது எப்படி என்பதை மிகவும் விளக்கமாக ட்ரம்ப்பிடம் கிம் தெரிவித்திருக்கிறார் என்பதை ட்ரம்ப் தன்னிடம் பகிர்ந்துகொண்டதை பாப் வுடவேர்டு தன் நூலில் எழுதி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

இதற்கிடையில், உலகம் முழுவதிலுமுள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனா பரவியுள்ள நிலையில் வட கொரியா மட்டும் தங்கள் நாட்டில் கொரோனா இல்லை எனத் தொடர்ந்து கூறி வருகிறது.

சீனாவுடன் மிக நெருக்கமான வர்த்தகத் தொடர்பிலுள்ள வட கொரியாவில் கொரோனா இல்லை என்பதை உலக நாடுகள் சந்தேகித்துவந்த நிலையில், வட கொரியாவுக்குள் கொரோனா பரவத் தொடங்கியிருப்பதாகக் கூறி, கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர சீன எல்லையில் கண்டதும் சுடும் உத்தரவை வட கொரியா பிறப்பித்திருப்பதாக தென் கொரியாவிலுள்ள, அமெரிக்க படைத்தளபதி ராபர்ட் அப்ராம்ஸ் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறார்.

கொரோனா பரவலைத் தடுக்க ஜனவரி மாதம், சீனாவுடனான தனது எல்லையை மூடியது வட கொரியா. இது குறித்து, கொரியாவிலுள்ள அமெரிக்கப் படைகளின் (USFK -US Forces Korea), தளபதி ராபர்ட் அப்ராம்ஸ், “எல்லை மூடல் கடத்தல் பொருள்களுக்கான தேவையை அதிகரித்திருக்கிறது” என்றார்.

அதைத் தொடர்ந்து, நேற்று வாஷிங்டனில் சி.எஸ்.ஐ.எஸ் ஏற்பாடு செய்திருந்த ஆன்லைன் மாநாட்டில் பங்கேற்ற ராபர்ட் அப்ராம்ஸ், “சீன எல்லையில் ஒன்று அல்லது இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கான பகுதியை, புதிய `இடையக மண்டலமாக’ ​​அறிமுகப்படுத்தி, அந்தப் பகுதியில் அத்துமீறி நுழைபவர்கள்மீது, வட கொரியவின் SOF, SF படைகள், துப்பாக்கிச்சூடு நடத்தி அவர்களைக் கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’’ என வட கொரியாமீது குற்றம்சாட்டினார்.

ஆட்சி, ராணுவம் இரண்டுமே தங்கள் நாட்டை மீட்டெடுப்பதிலும், கோவிட்-19 அபாயத்திலிருந்து தற்காத்துக்கொள்வதில்தான் அதிகம் கவனம் செலுத்திவருகிறது” என்றும் கூறினார்.

மேலும், சி.எஸ்.ஐ.எஸ் தனது இணையதளத்தில் வட கொரியாவின் சின்போ தெற்கு கடற்படைக் கப்பல் கட்டடத்தின் செயற்கைக்கோள் படத்தை வெளியிட்டது. நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை சோதனை செய்வதற்கான ஆயத்த பணிகளை குறிக்கும் வகையில் அந்தப் புகைப்படம் இருப்பதாக வல்லுநர்கள் குழு தெரிவித்துள்ளது.

கிம் மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இடையே சில சந்திப்புகள் இருந்தபோதிலும் அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இல்லாததற்கு, புதிய கொரிய ஏவுகணை சோதனை காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments