Monday, May 20, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்நீதியை சவப்பெட்டியில் வைத்து அதன் கடைசி ஆணியையும் நீதிபதி அறைந்து விட்டார் - ஜவாஹிருல்லா

நீதியை சவப்பெட்டியில் வைத்து அதன் கடைசி ஆணியையும் நீதிபதி அறைந்து விட்டார் – ஜவாஹிருல்லா

சென்னை

நீதியை சவப்பெட்டியில் வைத்து அதன் கடைசி ஆணியை நீதிபதி அறைந்துவிட்டார் என பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு குறித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாபரி பள்ளிவாசல் இடிப்பு வழக்கில் இன்று லக்னோ சிபிஐ விசாரணை நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு இந்திய நீதி பரிபாலனத்தின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட கடைசி ஆணியாக அமைந்துள்ளது. பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குச் சதி செய்தார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட 49 நபர்களில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 32 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை அளிக்கவில்லை. இது எதிர்பார்த்த தீர்ப்பாகவே அமைந்துள்ளது.

பாபரி மஸ்ஜிதை இடிப்பதற்கு அத்வானி உள்ளிட்டோர் சதி செய்தார்கள் என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி 32 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். பாபரி மஸ்ஜிதை இடித்து அது இருந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்பது பாஜக உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளின் நீண்ட காலத் திட்டம். பாஜகவின் தீர்மானங்கள் இதற்குச் சான்றாக இருக்கின்றன. பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் கரசேவை செய்வதற்காக 1989 முதல் இந்தியா முழுவதும் ரத்த ஆறுகளை ஓட்டிய ரத யாத்திரைகளை நடத்தியவர் அத்வானி. பாபரி மஸ்ஜித் இடிக்கும் இடத்தில் அத்வானி உள்ளிட்டோர் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று பள்ளிவாசல் இடிப்பு குறித்து விசாரித்த லிபர்ஹான் ஆணையம் மிகத் தெளிவாக இப்படிக் கூறுகின்றது:

“அத்வானி, ஜோஷி,விஜய்ராஜே சிந்தியா ஆகியோர் கரசேவகர்களை பள்ளிவாசல் மேலிருந்து கீழே இறங்கும்படி வேண்டா வெறுப்பாக வேண்டுகோள்களை விடுத்தனர். நல்லெண்ணத்துடன் இதைச்செய்தார்களா அல்லது ஊடகங்களின் கண்துடைப்பிற்காகச் செய்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் கரசேவகர்களை பள்ளிவாசலின் புனித இடத்திற்குள் நுழைய வேண்டாம் என்றோ கட்டிடத்தை இடிக்க வேண்டாம் என்றோ யாரும் கேட்டுக்கொள்ளவில்லை. இவ்வாறு அவர்கள் கேட்டுக் கொள்ளாதது, அவர்கள் சர்ச்சைக்குரிய கட்டிடத்தை இடித்து விட வேண்டுமென்பதே அவர்களின் உண்மை அவா என்பதைக் காட்டுவதாக உள்ளது”.

“இன்னொரு இடி இடித்து விடுங்கள் கட்டடம் கீழே விழும்” என்று உமாபாரதி கத்தியது அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பாகியது. பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கல்யாண் சிங் அதற்காக உச்சநீதிமன்றத்தால் ஒரு நாள் தண்டனை பெற்றார். பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட நாளில் அங்கு என்ன நடைபெற்றது என்பதை ஊடகங்கள் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த உலக மக்களே இடிப்பிற்குச் சதித்திட்டம் தீட்டியவர்கள் யார்..? என்பதற்குச் சாட்சியாக உள்ளார்கள்.

100க்கும் மேற்பட்ட யுமேடிக் காணொளி ஒளிநாடாக்கள் இந்த வழக்கில் நீதிமன்றத்தில் சாட்சியாகப் போட்டுக் காட்டப்பட்டுள்ளன. இருப்பினும் நீதிபதி எஸ் கே யாதவ், அத்வானி உள்ளிட்டோர் சதி செய்ததற்குச் சான்று இல்லை என்று கூறி அவர்களை விடுவித்துள்ளார்.

நமது நாட்டில் தற்போதைய நீதி பரிபாலன அவைகளில் இரண்டு வகையான நீதிபதிகள் தான் உள்ளார்கள். ஆசை வார்த்தைகளுக்கு அடிபணியாமல் தங்கள் உயிர்களைத் துச்சமாகக் கருதி நீதிக்காக தம் உயிர்களையும் தியாகம் செய்த நீதியரசர் லோயா போன்றோர் முதல் வகை-. பதவி பவிசு அதிகாரம் நீதிபதி பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் தொடர வேண்டும் என்று விரும்பும் ரஞ்சன் கோகாய் போன்றோர் இரண்டாம் வகை நீதிபதி எஸ் கே. யாதவ் இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்தவராக தனது தீர்ப்பின் மூலம் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.

நாட்டின் உயர்ந்த நீதி பரிபாலன அவையான உச்சநீதிமன்றமே பாபரி பள்ளிவாசல் இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் பாபரி பள்ளிவாசல் இருந்த இடத்தில் அதற்கு முன்பு அங்கு கட்டடங்கள் எதுவும் இருக்கவில்லை என்று சொல்லியதுடன், தொடர்ச்சியாக முஸ்லிம்கள் அங்கு வழிபாடு நடத்தினார்கள் என்று குறிப்பிட்டது. மேலும் பாபரி பள்ளிவாசல் இடிப்பு நாட்டின் சட்டத்தின் ஆட்சியின் மீது நடத்தப்பட்ட அக்கிரமம் நிறைந்த அத்துமீறல் என்று குறிப்பிட்டது. இத்தனையும் தெரிவித்து விட்டு பாபரி பள்ளிவாசல் இடத்தை எதிர் தரப்பிற்கு அளித்துத் தீர்ப்பு வழங்கியது.

நீதி பரிபாலன படித்தரத்தில் கீழ் நிலையில் உள்ள லக்னோ சிபிஐ விசாரணை மன்றம் இதே அடிப்படையில் பாபரி பள்ளிவாசலை இடித்தவர்களைத் தேச விரோதிகள் என்று கூறிவிட்டு அத்தகைய தேசத் துரோகிகளை அயோத்திக்கு கரசேவை செய்வதற்குத் தொடர்ந்து அழைப்புக் கொடுத்தவர்களை விடுவித்துள்ளது.

இந்திய நீதி பரிபாலனத்தை சவப்பெட்டியில் வைக்கும் பணியை ரஞ்சன் கோகாய் தொடங்கினார். அந்த சவப்பெட்டியின் கடைசி ஆணியைத் தனது தீர்ப்பின் மூலம் அறைந்துள்ளார் எஸ்.கே.யாதவ். நமது நாட்டில் நடைபெறும் இந்த அநீதியைக் களைந்து நீதிக்கு உயிர் அளிக்க காந்தியடிகள் விரும்பிய இந்தியாவை மீண்டும் கட்டமைக்க விரும்புவோர் ஒன்று சேர்ந்து எல்லா நிலைகளிலும் போராடுவது காலத்தின் கட்டாயமாகும்.

நீதித்துறையைக் காப்பாற்றுங்கள் என்ற கோரிக்கையுடன் நாளை மாலை 4 மணிக்கு மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் நகரங்கள், பேரூர்களில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் திரளாகப் பங்கு கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜவாஹிருல்லா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments