சான் பிரான்சிஸ்கோ
உயர்தர ஆன்லைன் செய்தி அனுபவத்தை மக்களுக்கு வழங்க, செய்தி நிறுவனங்களில் ரூ.7,300 கோடி முதலீடு செய்ய உள்ளோம் என, கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.
“கூகுள் நியூஸ் ஷோகேஸ்” என்ற சேவையை சுந்தர் பிச்சை அறிமுகப்படுத்தி பேசியதாவது:
செய்தித் துறையை ஆதரிப்பதற்காக இந்த முதலீடு செய்யப்படுகிறது. கொரோனா தாக்கத்தால் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ள உள்ளூர் பதிப்பாளர்களுக்கு இதன் மூலம் உதவ முடியும். சிறிய மற்றும் நடுத்தர பதிப்பாளர்கள் தங்கள் வணிக வளர்ச்சியை துரிதப்படுத்த இது உதவும்.
தலைசிறந்த ஆசிரியர் குழுவை கொண்ட இது, வாசகர்களுக்கு செய்திகளின் புதிய பரிமானத்தையும், வெளியீட்டாளர்களுக்கு தங்கள் பார்வையாளர்களுடன் ஆழமான உறவையும் வளர்க்க உதவும். முதல் கட்டமாக ஜெர்மனி, பிரேசில், அர்ஜென்டினா, கனடா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் முன்னணி பதிப்பாளர்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர். வரும் மாதங்களில் இந்தியா, பெல்ஜியம் மற்றும் பிற நாடுகளுக்கு நியூஸ் ஷோகேசை விரிவுப்படுத்த உள்ளோம்.
வீடியோ, ஆடியோ மற்றும் தினசரி செய்தி சுருக்கங்கள் போன்ற பிற அம்சங்கள் இதில் அடுத்ததாக வரும். எங்கள் நிதி முதலீடு மூன்று ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும். 21ம் நூற்றாண்டில் பத்திரிகை துறையை செழித்து வளரச் செய்வதே கூகுளின் நோக்கம். இவ்வாறு அவர் பேசினார்.