உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், பிரியங்கா உடன் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் சென்றனர். அப்போது நொய்டா பகுதியில் அவர்களை தடுத்து நிறுத்திய காவலர் ஒருவர் பிரியங்காவின் குர்தாவை பிடித்து இழுக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு அனைத்து தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் இந்நிகழ்வுக்கு காவல்துறை மன்னிப்பு கேட்டுள்ளது. இதுகுறித்து நொய்டா காவல்துறையின் டுவீட்டரில், மிகப் பெரிய கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் போது நடந்த இந்த சம்பவத்திற்கு நொய்டா காவல்துறை வருந்துகிறது.
பிரியங்காவிடமும் மன்னிப்பு கேட்கிறோம். இந்த விவகாரம் தலைமையகத்தின் துணை போலீஸ் கமிஷனரால் அறியப்பட்டு, ஒரு மூத்த போலீஸ் அதிகாரி இதுபற்றி விசாரித்து வருகிறார். விசாரணைக்குப் பிறகு தண்டனை நடவடிக்கை உறுதி செய்யப்படும். பெண்களின் முழு மரியாதைக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் எனப் பதிவிட்டுள்ளது.