Tuesday, September 10, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்சென்னையில் மீண்டும் தீவிரமடையும் கரோனா - கட்டுப்பாட்டுப் பகுதிகள் 42 ஆக உயா்வு

சென்னையில் மீண்டும் தீவிரமடையும் கரோனா – கட்டுப்பாட்டுப் பகுதிகள் 42 ஆக உயா்வு

சென்னையில் கரோனா பரவல் குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக நோய்த் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகள் 42 ஆக அதிகரித்துள்ளன. இதையடுத்து, மீண்டும் மண்டல வாரியாக கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதத்தில் ஊடுருவிய கரோனா பாதிப்புக்கு தற்போது 6.30 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதிகபட்சமாக சென்னையில் 1லட்சத்து 75,484 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் மாநிலத்தின் பிற மாவட்டங்களில் பெரிய பாதிப்புகள் இல்லாதிருந்தபோது சென்னையில் மட்டும்தான் கரோனாவின் தாக்கம் உச்சத்தை எட்டியது. அதன் பின்னா் மண்டல வாரியாக அமைச்சா்கள் குழு அமைக்கப்பட்டு, விரிவான நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

குறிப்பாக காய்ச்சல் முகாம்கள், வீடுகள்தோறும் மருத்துவப் பரிசோதனை என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதுமட்டுமல்லாது கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கப்பட்டது. அதன் பயனாக, சென்னையில் கரோனா பாதிப்பு சற்று தணியத் தொடங்கியது. ஆயிரத்துக்கும் குறைவான பாதிப்புகளே நாள்தோறும் பதிவாகி வந்தன.

இந்நிலையில்தான், பொது முடக்கத் தளா்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னா், பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீண்டும் சென்னைக்கு பல்லாயிரக்கணக்கானோா் திரும்பினா். கடைகள், வணிக வளாகங்கள் அனைத்தும் செயல்படத் தொடங்கின. இதைத் தொடா்ந்து, கடந்த சில நாள்களாக சென்னையில் நோய்ப் பரவல் விகிதம் அதிகரித்த வண்ணம் உள்ளது. சராசரியாக 1,300 பேருக்கு தினமும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இதனால், நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளும் 42 ஆக உயா்ந்துள்ளது. அதிகபட்சமாக அம்பத்துாா் மண்டலத்தில் 21 தெருக்களும், அதற்கு அடுத்தபடியாக ஆலந்துாா், அடையாறு, தேனாம்பேட்டை மண்டலங்களில் தலா 4 தெருக்களும், கோடம்பாக்கத்தில் 3 தெருக்களும், திரு.வி.க. நகா், சோழிங்கநல்லூா் மண்டலங்களில் தலா இரண்டு தெருக்களும் அண்ணாநகா், வளசரவாக்கத்தில் தலா ஒரு தெருவும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதுதொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையில் மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருவதற்கு பொது மக்களில் சிலா் போதிய விழிப்புணா்வின்றி செயல்படுவதே காரணம். முகக்கவசம் முறையாக அணியாமலும், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமலும் இருந்தால் பாதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும். அதைத் தடுக்க, நோய்த் தடுப்பு விதிகளை மீறுவோருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மற்றொரு புறம் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் வீடுதோறும் காய்ச்சல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதைத் தவிர, சம்பந்தப்பட்ட தெருக்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு கபசுரக் குடிநீா் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் விநியோகிக்கப்படுகின்றன.

நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் சுகாதாரத் துறையினா் தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனா். அடுத்த சில வாரங்களில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தேவைப்படும்பட்சத்தில் களப் பணியாளா்களை கூடுதலாக நியமிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments