ஸ்டாக்ஹோம்,
உலகளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் மிகச்சிறப்பாக பணியாற்றி சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. நோபல் பரிசை பெற வேண்டும் என்பது பல்துறை சாதனையாளர்களின் கனவாக இருக்கிறது.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பு, நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் வெளியாக தொடங்கியது. முதலில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஹெபாடைடிஸ்-சி வைரசை கண்டுபிடித்த விஞ்ஞானிகளான ஹார்வே ஜே. ஆல்டர், சார்லஸ் எம்.ரைஸ், மைக்கேல் ஹாக்டன் ஆகிய 3 பேர் மருத்துவத்துக்கான நோபல் பரிசை பெறுவதாக நோபல் பரிசு அகாடமி அறிவித்தது.
இந்த ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை ரோஜர் பென்ரோஸ் (இங்கிலாந்து), ரெயின்ஹார்டு ஜென்சல் (ஜெர்மனி), ஆண்ட்ரியா கெஸ் (அமெரிக்கா) ஆகிய 3 விஞ்ஞானிகள் கூட்டாக பெறுகிறார்கள்.
இதற்கான அறிவிப்பை ஸ்டாக்ஹோம் நகரில் நேற்று நோபல் பரிசு அகாடமியின் பொதுச்செயலாளர் கோரன் கே.ஹான்சன் வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:
அண்டவெளியின் கருந்துளை உருவாக்கம் என்பது பொதுவான சார்பியல் கோட்பாட்டின் வலுவான முன்கணிப்பு என்பதை கண்டுபிடித்ததற்காக ரோஜர் பென்ரோஸ், இந்த ஆண்டு இயற்பியல் நோபல் பரிசின் பாதியை (50 சதவீதம்) பெறுகிறார்.
எஞ்சிய பாதியை, நமது நட்சத்திர மண்டலத்தின் மத்தியில் இருக்கும் ஒரு அதிசயமான சிறிய பொருளை கண்டுபிடித்ததற்காக விஞ்ஞானிகள் ரெயின்ஹார்டு ஜென்சல்லும், ஆண்ட்ரியா கெஸ்சும் (தலா 25 சதவீதம்) பெறுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
விஞ்ஞானி ரோஜர் பென்ரோஸ் (வயது 89), ஆங்கில கணித இயற்பியலாளர், கணிதவியலாளர், அறிவியல் தத்துவஞானியும் ஆவார். இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கணிதவியல் பேராசிரியராக உள்ளார்.
விஞ்ஞானி ரெயின்ஹார்டு ஜென்சல் (68), ஜெர்மனியின் வானியற்பியல் துறை விஞ்ஞானி ஆவார்.
பெண் விஞ்ஞானி ஆண்ட்ரியா கெஸ் (55), கலிபோர்னியா-லாஸ்ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் வானியல் துறை பேராசிரியர் ஆவார்.
நோபல் பரிசு ஒரு தங்க பதக்கம், பாராட்டு சான்றிதழ், 1.1 மில்லியன் டாலர் ரொக்கம் (சுமார் ரூ.8¼ கோடி) கொண்டதாகும்.
3 பேர் இயற்பியல் நோபல் பரிசை பகிர்ந்து கொண்டாலும், மூவருக்கும் தலா ஒரு தங்க பதக்கமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும். பரிசுப்பணத்தை மட்டும் அறிவித்தபடி 3 பேரும் பகிர்ந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.