Saturday, April 20, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்`தமிழர்களுக்குப் பிச்சை போடுகிறீர்களா?' - கொதித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள்

`தமிழர்களுக்குப் பிச்சை போடுகிறீர்களா?’ – கொதித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள்

`தமிழ்நாட்டு வேலைகளில் தமிழர்களுக்கு அல்லது தமிழக மக்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்’ என அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் கோரிக்கை வைத்து வரும்நிலையில், உயர் நீதிமன்றமும் இதுகுறித்து கேள்வி எழுப்பியிருக்கிறது.

பிற மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் பணி வழங்கிவரும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் பிற மாநிலத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் அரசுப் பணிகளில் நியமிக்கப்படுவது ஏன்?

ஊட்டி ஆயுதத் தொழிற்சாலையில், கெமிக்கல் பிராசஸிங் பிரிவில் 140 பணியிடங்களை நிரப்ப 2015-ல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. அந்தப் பணிக்கான எழுத்துத் தேர்வில் ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த சரவணன் 40 மதிப்பெண்கள் பெற்றார். ஆனால், அவரைவிடக் குறைவான மதிப்பெண் பெற்ற வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஆறு பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. அந்த ஆறு பேரின் பணி நியமனத்தை ரத்துசெய்யக் கோரியும், தனக்குப் பணி வழங்கக் கோரியும் சரவணன், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அவருக்குப் பணி வழங்க உத்தரவிட்டார். ஆனால், நீதிபதியின் ஆணையை ரத்துசெய்யக் கோரி ஆயுதத் தொழிற்சாலை சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போதுதான் நீதிபதிகள், இப்படியொரு கேள்வியைத் தமிழக அரசை நோக்கி எழுப்பியிருக்கின்றனர்.

`தமிழ்நாட்டு வேலைகளில் தமிழர்களுக்கு அல்லது தமிழ்நாட்டு மக்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும்’ என்று தமிழ்நாட்டில் தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க, விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழ்த் தேசியப் பேரியக்கம், திராவிடர் கழகம் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் கோரிக்கையை முன்வைத்து வந்தநிலையில், தற்போது உயர் நீதிமன்றமும் இப்படியொரு கேள்வியை தமிழக அரசை நோக்கி எழுப்பியிருப்பது மிகப்பெரிய விவாதமாகியிருக்கிறது.

இந்த வழக்கின் விசாரணையில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுப்பையா “ஆயுதத் தொழிற்சாலை பணியில் 140 பணியிடங்களில் 50 சதவிகிதம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்” என்று கூற, அப்போது உடனடியாகக் குறிக்கிட்ட நீதிபதி என். கிருபாகரன், “தமிழ்நாட்டுக்கு என்ன பிச்சை போடுகிறீர்களா?’’ என்று மிகக் காட்டமாகக் கேட்டிருக்கிறார்.

வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் நாராயணன் கூறியது:

வட மாநில இளைஞர்கள், அரசுத் தேர்வுகளில் இந்தியில் ஃபெயிலாவதும், தமிழில் அதிக மதிப்பெண்கள் எடுத்து பாஸாவதும் இயல்பாகவே இந்தத் தேர்வு முறைகளிலுள்ள முறைகேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுகின்றன. இங்கு இருக்கும் அரசுத்துறைகளில் வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களை உள்நுழைத்துவிடுகின்றனர். இந்த முறைகேடுகள் அரசியல் காரணங்களுக்காகவும் நடைபெறுகின்றன. தவிர, பிற மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இது போன்ற முறைகேடுகளுக்குத் துணைபோகின்றனர் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments