சென்னை
தங்கத்தின் விலை கடந்த 1-ந் தேதி ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 815 ஆக இருந்தது. அதன்படி, ஒரு பவுன் தங்கம் ரூ.38 ஆயிரத்து 520-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், உலக அளவிலான பொருளாதார மாற்றம் மற்றும் பங்கு சந்தையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கம் காரணமாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் தங்கத்தின் விலை திடீரென பவுனுக்கு ரூ.1,464 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.37 ஆயிரத்து 440-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கத்தின் விலை மாற்றம் இன்றி அதே விலைக்கு விற்பனையானது. இதனால், நகை கடைகளில் தங்கம் விற்பனை நேற்று அதிகரித்து காணப்பட்டது.
தங்கத்தின் விலை ஒரே நாளில் அதிக அளவில் குறைந்ததாலும், பண்டிகைகள் நெருங்குவதாலும், பொதுமக்களிடையே தங்கம் வாங்க மிகவும் அதிகமாக ஆர்வம் ஏற்பட்டது. நேற்று சென்னையில் உள்ள ஜி.ஆர்.டி. ஜூவல்லரி, பிரின்ஸ் ஜூவல்லரி, லலிதா ஜூவல்லரி, கசானா ஜூவல்லரி, என்.ஏ.சி. ஜூவல்லரி, ஜோய் அலுக்காஸ், மலபார் கோல்டு ஜூவல்லரி, சரவணா ஸ்டோர்ஸ் போன்ற நகை கடைகளில் நேற்று காலை முதலே பொதுமக்கள் ஏராளமாக சென்று நகை வாங்கினர்.
நகை கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றி வாடிக்கையாளர்களுக்கு நகைகள் விற்பனை செய்யப்பட்டன. தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,464 குறைந்தது குறித்து சென்னை நகை கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறும்போது, “இந்தியாவில் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்வதில் ஏற்பட்டுள்ள கொள்கை மாற்றம் காரணமாக சில்லரைக்கு விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஒருநாள் தங்க விலை குறைவுக்கும், பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று கூறினார்.