மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க கோரி கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா, தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக கடந்த செப். 15 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையிலும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கவில்லை.
இந்த மசோதாவுக்கு இன்னும் காலம் தாழ்த்தாமல் ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என, தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன
இந்நிலையில், மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்காத ஆளுநரைக் கண்டித்தும் ஆளுநருக்கு அடங்கிப்போவதாக தமிழக அரசைக் கண்டித்தும், கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு இன்று (அக். 24) தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று காலை 10 மணியளவில் கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு தி.மு.க சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, பொன்முடி, கனிமொழி எம்.பி., மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநரைக் கண்டித்தும், தமிழக அரசுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.