பாட்னா
பீகார் சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போதே சுயேட்சை வேட்பாளர் நாராயண்சிங் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலையாளியை நாராயண்சிங் ஆதரவாளர்கள் அடித்தே கொலை செய்தனர். இந்த சம்பவங்களால் பீகார் தேர்தல் களத்தில் பதற்றம் நிலவுகிறது.
பீகாரில் முதல் கட்ட சட்டசபை தேர்தல் வரும் 28-ந் தேதி நடைபெறுகிறது. இதனால் பீகார் தேர்தல் களத்தில் பிரசாரம் அனல் பறக்கிறது. பொதுவாக வன்முறைகள் இல்லாமல்தான் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் சனிக்கிழமையன்று சியோஹர் தொகுதியில் வாக்கு சேகரித்து கொண்டிருந்த சுயேட்சை வேட்பாளர் நாராயண்சிங் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அவரது ஆதரவாளர்கள் 2 பேரில் ஒருவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் நாராயண்சிங்கை சுட்டுக் கொன்ற கொலையாளியை சுற்றி வளைத்து பிடித்த ஆதரவாளர்கள் அந்த நபரை அடித்தே கொலை செய்தனர். இச்சம்பவத்தில் உயிர் பிழைத்து சிகிச்சை பெற்று வரும் அபய்குமார் கூறுகையில், மோட்டார் சைக்கிளில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் நாராயண்சிங்கை நோக்கி சரமாரியாக சுட்டது. அவரை காப்பாற்ற முயன்றோம். ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை என்றார்.