சென்னை
மத்திய அரசு அறிமுகப்படுத்திய 3 வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார திருத்த சட்டம் ஆகிவற்றை எதிர்த்தும், அச்சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் தலைநகர் டெல்லியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக லட்சக்கணக்கான விவசாயிகள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் 8-ந் தேதி (இன்று) முழு அடைப்பு போராட்டத்தை (பாரத் பந்த்) டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அறிவித்தனர்.
இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் பெரும்பாலான பகுதிகளில் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம் நடத்துகின்றனர்.
இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மதுரை மாவட்ட சமதா கட்சி சார்பில், மதுரை மாவட்டத் தலைவர் துரைபாண்டியன், இளைஞர் அணி செயலாளர் நாகராஜ், மாவட்ட துணைத் தலைவர் முனியாண்டி, ஜெகநேசன், கணேசன் மற்றும் பலர் திருப்பரங்குன்றத்தில் பஸ் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.