Thursday, December 12, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeவர்த்தகம்உச்சநீதிமன்ற உத்தரவை மீறி கூடுதல் வட்டி கேட்டு வீட்டிற்கு அடியாட்களை அனுப்பி மிரட்டல் விடுத்த தனியார்...

உச்சநீதிமன்ற உத்தரவை மீறி கூடுதல் வட்டி கேட்டு வீட்டிற்கு அடியாட்களை அனுப்பி மிரட்டல் விடுத்த தனியார் வங்கி

திருவொற்றியூர் அடுத்த மணலி மாத்தூர் எம்எம்டிஏ பகுதியை சேர்ந்த சுகுமாரன் வயது 45, திருமண அழைப்பிதழ் கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 2011ம் ஆண்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் ரூ.1.70 லட்சம தனிநபர் கடன் பெற்றுள்ளார். இதற்கான மாதத்தவணையாக ரூ.5,800 செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கால் வருவாயின்றி மாதத்தவணையை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வுக்கு பிறகு, கடந்த 2 மாதங்களாக தவணை தொகையை செலுத்தி உள்ளார். விடுபட்ட தொகையை கூடுதல் வட்டியுடன் செலுத்த வேண்டும் என்று வங்கி நிர்வாகம் சுகுமாரனிடம் தெரிவித்துள்ளது.

கொரோனா காலத்தில் வட்டி வசூலிக்க கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, கூடுதல் வட்டியை செலுத்த முடியாது, என சுகுமாரன் கூறியுள்ளார். இதை ஏற்காத வங்கி நிர்வாகம், சுகுமாரனுக்கு அடிக்கடி போன் செய்து கூடுதல் வட்டியுடன் தவணை தொகையை செலுத்தும்படி கூறியுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் சுகுமாரன் மற்றும் அவரது மனைவி இருவரும் வெளியே சென்று இருந்தனர். வீட்டில் இவர்களது 2 மகன்கள் மட்டும் தனியே இருந்துள்ளனர். அப்போது, சம்பந்தப்பட்ட வங்கியின் கலெக்சன் ஏஜென்சி நபர்கள் அடியாட்களுடன் சுகுமாரனின் வீட்டுக்கு வந்து, அவரது மகன்கள் இருவரிடமும் வட்டி தொகையை செலுத்த வேண்டும் என்று மிரட்டியுள்ளனர்.இதனால் பயந்து போன மகன்கள் அழுதுள்ளனர். சிறிது நேரம் அங்கே இருந்த ஏஜென்சி அடியாட்கள் பின்னர் அங்கிருந்தபடி சுகுமாரனுக்கு போன் செய்து கடனை கேட்டு தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டிவிட்டு சென்றுள்ளனர்.

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான சுகுமாரன் இதுகுறித்து மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி விசாரணை செய்து வருகின்றனர். தனியார் வங்கிகள் 6 மாதம் வாடிக்கையாளர்களுக்கு அவகாசம் அளிக்கலாம். மேலும் கூடுதல் வட்டி வசூலிக்கக்கூடாது என ரிசர்வ் வங்கி மற்றும் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதை ஏற்காத சில தனியார் வங்கிகள் இதுபோல் விடுபட்ட கடன் தொகையையும் கூடுதல் வட்டியையும் கேட்டு வாடிக்கையாளர்களை துன்புறுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments