Wednesday, November 29, 2023
Home இந்தியா வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் உண்ணாவிரதம் - அரியானா, ...

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் உண்ணாவிரதம் – அரியானா, பஞ்சாப்பில் போராட்டம் – துணை ராணுவம் குவிப்பு

புதுடெல்லி

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்தநிலையில், அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் தர்ணா போராட்டம் நடந்தது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. நேற்று 19-வது நாளை எட்டிய இந்த போராட்டத்தில், பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த சட்டங்கள் தொடர்பாக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் பலனளிக்காததால் சிங்கு, திக்ரி, காஜிப்பூர் என டெல்லியின் பல்வேறு எல்லை பகுதிகள் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் முற்றுகையால் பரபரப்பாக காணப்படுகிறது.

புதிய வேளாண் சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலை, மண்டி அமைப்புகள் போன்றவற்றை ஒழித்துவிடும் என்ற கவலையை வெளியிட்டு வரும் விவசாயிகள், இந்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக உள்ளனர். இதனால் அரசுடன் நடந்த 5 சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததுடன், அரசு தெரிவித்த யோசனைகளும் விவசாயிகளால் நிராகரிக்கப்பட்டன.

இதனால் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இதன் ஒரு பகுதியாக நேற்று விவசாயிகள் ஒருநாள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர். அதன்படி 30-க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளின் தலைவர்கள் தாங்கள் போராட்டம் நடத்தி வரும் எல்லை பகுதிகளிலேயே உண்ணாவிரதம் இருந்தனர்.

காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த உண்ணாவிரதம், மாலை 5 மணி வரை நீடித்தது. முற்றுகை போராட்டத்துக்கு மத்தியில் நடந்த இந்த உண்ணாவிரதம், போராட்டக்களத்தில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தது. விவசாயிகளின் இந்த உண்ணாவிரதத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தன. குறிப்பாக டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி இந்த உண்ணாவிரதத்துக்கு ஆதரவு அளித்திருந்தது. அதன்படி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால், விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்தார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், “உண்ணாவிரதம் புனிதமானது. நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ, அங்கு நமது விவசாய சகோதரர்களுக்காக உண்ணாவிரதம் இருங்கள். அத்துடன் இந்த போராட்டம் வெற்றி பெற பிரார்த்தியுங்கள். இறுதியில் விவசாயிகள் நிச்சயம் வெல்வார்கள்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் கட்சியின் மற்றொரு தலைவரும், துணை முதல்-மந்திரியுமான மணிஷ் சிசோடியா தனது அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். இதைப்போல மாநில மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட கட்சியினர் ஏராளமானோர் உண்ணாவிரதம் இருந்தனர்.

அதேநேரம் டெல்லியில் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் பாரதிய கிசான் யூனியன் (ஏக்தா உக்ரகான்) என்ற அமைப்பை சேர்ந்த விவசாயிகள் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்கவில்லை. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள்தான் சமீபத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர்களை விடுவிக்கக் கோரும் பதாகைகளை போராட்டக்களத்தில் ஏந்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே வேளாண் சட்டங்களுக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டம் நடத்த விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
குறிப்பாக அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் விவசாயிகள் பெரும் திரளாக வந்து இந்த போராட்டங்களில் கலந்து கொண்டனர். அரியானாவில் பதேகாபாத், ஜிந்த், சிர்சா, குர்கான் உள்ளிட்ட மாவட்டங்களின் தலைநகரங்களில் விவசாயிகளின் தர்ணா நடந்தது.
பஞ்சாப்பை பொறுத்தவரை லூதியானா, பாட்டியாலா, சங்ருர், பர்னாலா, பதிண்டா, மோகா உள்ளிட்ட மாவட்டங்களின் தலைநகரங்களில் இந்த தர்ணா போராட்டம் நடந்தது.

அங்கு ஆளும் காங்கிரஸ் சார்பிலும் பல இடங்களில் போராட்டம் நடந்தது. இதில் சம்பு எல்லை பகுதியில் நடந்த போராட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர் கலந்து கொண்டார். இதைப்போல எதிர்க்கட்சியான சிரோமணி அகாலிதளம் தொண்டர்கள் அமிர்தசரசில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்னதாக பேரணியை நடத்தி வேளாண் சட்டங்களுக்கு எதிராக தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். அரியானாவின் பரிதாபாத்தில் விவசாயிகளுடன், வக்கீல்களும் இணைந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

இந்நிலையில் பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் இருந்து இன்னும் ஏராளமான விவசாயிகள் டெல்லி போராட்டக்களத்துக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறு ராஜஸ்தானில் இருந்து பேரணியாக வந்த விவசாயிகளை அல்வார் மாவட்டத்தில் போலீசார் தடுத்து நிறுத்தினர். எனவே அவர்கள் ஷாஜகான்பூரில் ஜெய்ப்பூர்-டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். அரியானா எல்லையை ஒட்டியுள்ள இந்த பகுதியில் நடந்து வரும் இந்த மறியலால் சாலையில் போக்குவரத்து தடைபட்டு உள்ளது.

இவ்வாறு டெல்லியை நோக்கி விவசாயிகள் படையெடுத்து வருவதால், சிங்கு உள்ளிட்ட டெல்லி எல்லைகள் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கான்கிரீட் கட்டைகள், தடுப்பு வேலிகள், முள்வேலிகள் மூலம் பல அடுக்கு பாதுகாப்பு போட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

மாநில போலீசாருடன் இணைந்து துணை ராணுவமும் குவிக்கப்பட்டு உள்ளதால் அரியானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களுடனான டெல்லி எல்லைகள் நெடுகிலும் பதற்றமும், பரபரப்பும் நிலவி வருகிறது.

- Advertisment -

Most Popular

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

ஐடி கம்பெனி வேலையை உதறிவிட்டு செருப்பு தைக்கும் தொழிலாளி

இந்திய பிரதமர் மிகவும் எளிமையானவர் என்று எல்லோருக்கும் தெரியும்? ஏழைப்பங்காளன், விளம்பரமே பிடிக்காதவர்? செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் எப்படி சகஜமாக பேசுகிறார் பாருங்கள். அந்த தொழிலாளி பேன்ட் சட்டை போட்டு கழுத்தில் டேக்(tag) மாட்டி...

மும்பையில் நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலியா 3 விக்கட் வித்யாசத்தில் வென்றது. முதலில் பேட் செய்த ஆப்கான் 291 ரன்கள் எடுத்தது. 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு...

Recent Comments