சென்னை
நிபந்தனைகளுடன் இசையமைப்பாளர் இளையராஜாவை அனுமதிக்க தயார் என பிரசாத் ஸ்டுடியோ தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை சாலிகிராமத்திலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு பகுதியை இளையராஜா கடந்த 40 ஆண்டுகளாக தன்னுடைய இசையமைப்புக்காகப் பயன்படுத்தி வந்தார். 2019-ல் இதனை காலி செய்ய வேண்டும் என்று இளையராஜாவை பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் கேட்டுக் கொண்டது.
இது தொடர்பாக இருதரப்புக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து தாம் வெளியேற்றப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ50 லட்சம் இழப்பீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். சதீஷ்குமார் விசாரித்து வருகிறார்.
இவ்வழக்கில் இளையராஜாவை ஒருநாள் தியானம் செய்ய அனுமதிக்க முடியுமா? என பிரசாத் ஸ்டுடியோ பதிலளிக்க நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த பிரசாத் ஸ்டுடியோ, இளையராஜாவை அனுமதிக்க முடியாது, அவரது பிரதிநிதிகள் வந்து இளையராஜாவின் பொருட்களை எடுத்து செல்லலாம் என கூறியது.
பின்னர், இளையராஜாவின் பொருட்களை எடுக்க வழக்கறிஞர் ஒருவரை ஆணையராக நியமிப்பதாகவும் அவருடன் இளையராஜா, உதவியாளர் செல்லலாம் என நீதிபதி சதீஷ்குமார் யோசனை தெரிவித்தார். இந்த யோசனை தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என்று இருதரப்புக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது. இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, பிரசாத் ஸ்டுடியோ தரப்பு 30 நிமிடத்தில் பதில் தருவதற்கு கெடு விதித்தார் நீதிபதி சதீஷ்குமார்.
இதனையடுத்து, நிபந்தனைகளுடன் இளையராஜாவை அனுமதிக்க தயார்; அவருடன் உதவியாளர், வழக்கறிஞர் வந்து பொருட்களை எடுத்து செல்லலாம் என பிரசாத் ஸ்டுடியோ தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த நிபந்தனைகளை ஏற்று இன்று மாலைக்குள் பதில் அளிப்பதாக இளையராஜா தரப்பு கூறியது. இதனையடுத்து இவ்வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார் நீதிபதி சதீஷ்குமார்.