சென்னை
காளீஸ்வரி நிறுவனத்தின் தீபம் ஆயில் என்ற பெயரை மற்றொரு நிறுவனம் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. காளீஸ்வரி நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், காளீஸ்வரி நிறுவனத்தின் டிரேட் மார்க் முத்திரையை போலியாக வரைந்து மற்ற நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தி தங்களின் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள்.
சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஹேமா புட்ஸ் நிறுவனம் நந்தி தீபம் ஆயில் என்ற பெயரில் விளக்கேற்றும் எண்ணெயை விற்பனை செய்து வருகிறது. தீபம் என்ற பெயர் எங்களின் காப்புரிமை. அதை ஹேமா புட்ஸ் நிறுவனம் தனது தயாரிப்பு எண்ணெயை விற்பனை செய்ய பயன்படுத்தக் கூடாது. அதுமட்டுமல்லாமல் தீபம் ஆயில் பாட்டிலின் வடிவம், முத்திரை ஆகியவற்றையும் பயன்படுத்துகிறார்கள். எனவே, தீபம் ஆயில் என்ற பெயரை ஹேமா புட்ஸ் நிறுவனம் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஹேமா புட்ஸ் நிறுவனம் தீபம் ஆயில் என்ற பெயரை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து கடந்த செப்டம்பரில் உத்தரவிட்டது. இந்த தடை உத்தரவை நீக்க கோரி ஹேமா புட்ஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
அதில், தீபம் என்பது பொதுவானதாகும். எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பு எண்ணெய் நந்தி தீபம் என்று தான் உள்ளது. எனவே, நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரியிருந்தது.
இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. காளீஸ்வரி நிறுவனம் சார்பில் வக்கீல் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி தடையை நீக்க எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, காளீஸ்வரி நிறுவனத்தின் தீபம் ஆயில் என்ற பெயரை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்த நீதிபதி, தடை தொடரும் என்று உத்தரவிட்டார்.