டெல்லியில் 35ஆம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் விடுத்த கோரிக்கைகளில் முக்கியமானதாக கருதப்படும் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்பதில் இந்திய அரசு தொடர்ந்து உறுதியாக உள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் மத்திய அரசுடன் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள், ஆறாம் சுற்று பேச்சுவார்த்தையை நடத்தினர். பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை இரவு 7.30 மணிவரை நீடித்தது.
இதன் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், “விவசாயிகள் முன்வைத்த 4 பிரச்னைகளில் 2க்கு கருத்தொற்றுமை எட்டப்பட்டுள்ளது,” என்று கூறினார்.
குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என்று ஆரம்பம் முதலே அரசு தொடர்ந்து பேசி வருகிறது என்று கூறிய அவர், அந்த விலை நிர்ணய கொள்கைக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து தேவை என விவசாயிகள் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக விவாதிக்க அரசு தொடர்ந்து தயாராக உள்ளது என்பதால் வரும் ஜனவரி 4ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடி பேச தீர்மானித்துள்ளோம் என்று அமைச்சர் தோமர் தெரிவித்தார்.