புதுச்சேரி
புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதுவை அரசு, கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்காக கொரோனா போர் அறையின் மூலம் செயல் திட்டங்கள் தீட்டப்பட்டது. இந்த செயல் திட்டங்களை தற்போது காரைக்காலில் நடைமுறைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக நிவாரணம் மற்றும் மறுவாழ்வு துறை செயலர் அன்பரசு தலைமையிலான அதிகாரிகள் காரைக்காலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தின் விவாதத்தில் இருந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் காரைக்கால் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும், நோய் தொற்று குறைந்த பகுதியாகவும் கருத்தில் கொள்ளப்பட்டு உள்ளது.
திருநள்ளாறு சனிபகவான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வருகை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு தொற்று பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை இன்னும் அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கொரோனா பரிசோதனையை 500-ல் இருந்து 1000 ஆக உயர்த்திடவும், அதனை தனியார் மருத்துவக்கல்லூரி ஒத்துழைப்புடன் செய்திடவும் முடிவு செய்யப்பட்டது.
அங்கு 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கொரோனா கட்டுப்பாட்டு அறை நாளை (இன்று செவ்வாய்க்கிழமை) முதல் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொற்றின் தாக்கத்தை குறைத்திட 7 அம்சங்கள் கொண்ட செயல்திட்டங்களை 7 அதிகாரிகள் மூலம் அமல்படுத்திட ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
திருநள்ளாறு கோவிலில் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை திருப்தி அளிப்பதாக அதிகாரிகள் நடவடிக்கையின் மூலம் அறியப்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதன் மூலம் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக காரைக்கால் விளங்கிட முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.