புதுடெல்லி
வேளாண் மக்களின் நலன்களை முன்னிட்டு மத்திய அரசு நாடாளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. ஆனால், அவற்றை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கடந்த ஆண்டு நவம்பர் 26ந்தேதி விவசாயிகளில் ஒரு பிரிவினர் டெல்லி சலோ என்ற பெயரில் பேரணியாக புறப்பட்டு சென்றனர்.
அவர்களுடன் அரியானா, பஞ்சாப் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநில விவசாயிகளும் இணைந்து கொண்டனர். கடந்த 2 மாதங்களுக்கும் கூடுதலாக போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. இதற்கிடையே, அரசுடன் நடத்தப்பட்ட 11 சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வியை சந்தித்தன.
இந்த சூழலில், குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவோம் என விவசாயிகள் சங்கம் அறிவித்தது. இந்த பேரணியில், விவசாயிகளில் ஒரு தரப்பினர் போலீசார் அனுமதி அளித்த நேரத்திற்கு முன், அனுமதிக்கப்பட்ட பகுதிகளை மீறி தடுப்புகளை உடைத்து கொண்டு முன்னேறினர்.
இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் செங்கோட்டையில் ஏறி விவசாயிகள் மத கொடி ஒன்றையும் நட்டனர். இந்த சம்பவத்தில், போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் மோதல் ஏற்பட்டது. டிராக்டர் பேரணியில், விவசாயிகள் கடுமையாக தாக்கியதில் 83 போலீசார் காயம் அடைந்து உள்ளனர் என தெரிவித்தனர்.
கிழக்கு டெல்லி பகுதியில் வன்முறையில் ஈடுபட்டதற்காக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 8 பேருந்துகள் மற்றும் 17 தனியார் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு உள்ளன என தெரிவிக்கப்பட்டது. இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 25 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன.
இந்நிலையில், டெல்லி போலீசின் துணை ஆணையாளர் சின்மொய் பிஸ்வால், சன்யுக்த கிசான் மோர்ச்சா என்ற விவசாய அமைப்பினை சேர்ந்த தர்சன் பால் என்பவருக்கு விளக்கம் கேட்டு நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், குடியரசு தினத்தன்று போராட்டம் நடத்துவதற்கு குறிப்பிட்ட பாதைகளில் செல்ல டெல்லி போலீசார் வழங்கிய அனுமதிக்கான ஒப்பந்தம் மீறப்பட்டு உள்ளது.
இந்த விதிமீறலில் ஈடுபட்டதற்காக உங்கள் மீதும் மற்றும் உங்களுடைய கூட்டாளிகள் மீதும் ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது? என கேட்டு அதற்கு அடுத்த 3 நாட்களுக்குள் உரிய பதில் அளிக்கும்படி கேட்டுள்ளார்.
இந்நிலையில், டெல்லியில் டிராக்டர் பேரணியை முடித்து கொண்டு திரும்பிய விவசாயிகள், திக்ரி எல்லையில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தியும், கொடிகளை ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பியும் அவர்கள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் எல்லை பகுதியில் பாதுகாப்பு பணிகளுக்காக குவிக்கப்பட்டனர். திக்ரி எல்லையில் விவசாயிகளின் அரை நிர்வாண போராட்டம் இன்று 2வது நாளாகவும் தொடர்ந்து வருகிறது.