இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள், புதன்கிழமை வர்த்தகத்தில் 2 சதவீதம் சரிவைச் சந்தித்ததை அடுத்துச் சென்செக்ஸ் குறியீட்டில் தொடர்ந்து 2வது நாளாக மிகவும் மோசமான சரிவை எதிர்கொண்ட நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் சரிவைக் கண்டு அதிர்ச்சியில் இருக்கும் முதலீட்டாளர்களுக்குச் சர்வதேச முதலீட்டு வங்கியான Macquarie ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தத் தொடர் சரிவின் காரணமாக முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் மதிப்பு கடந்த 3 நாட்களில் சுமார் 1.4 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து 4 வர்த்தக நாட்களாகச் சரிவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச முதலீட்டு வங்கியான Macquarie நிறுவனத்தின் ஆதித்யா சுரேஷ் மற்றும் அபிநில் தஹிவாலே ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் சரிவு பாதையின் துவக்கம் தான், இதை விடவும் பெரிய சரிவடையும் ஆபத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளது எனத் தெரிவித்துள்ளது.