Wednesday, April 24, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்அய்யா வைகுண்டரின் 189வது அவதார தினம் - விழாக்கோலம் பூண்ட தென் மாவட்டங்கள்

அய்யா வைகுண்டரின் 189வது அவதார தினம் – விழாக்கோலம் பூண்ட தென் மாவட்டங்கள்

அய்யா வைகுண்டசாமியின் 189வது அவதார தின விழாவை முன்னிட்டு குமரி மாவட்டம் சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதிக்கு அய்யா வழி பக்தர்கள் பங்கேற்ற பிரமாண்ட ஊர்வலம் நடந்தது.

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் அய்யா வைகுண்டர். சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் ஒருங்கிணைந்த அவதாரமாக அய்யா வைகுண்டரை அவர் வழியை பின்பற்றும் மக்கள் பார்க்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் தாமரைக்குளம் கிராமம் சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி உள்ளது.

அய்யா வைகுண்டசாமியின் 189வது அவதார தின விழாவை முன்னிட்டு குமரி மாவட்டம் சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதிக்கு அய்யா வழி பக்தர்கள் பங்கேற்ற பிரமாண்ட ஊர்வலம் நடந்தது.

முன்னதாக நேற்று காலை அய்யா வைகுண்டர் விஞ்சை பெற்ற திருச்செந்தூரில் இருந்து பக்தர்கள் வாகனங்களில் ஊர்வலமாக புறப்பட்டு நாகர்கோவில் வந்தனர். இரவு நாகராஜா கோவில் திருமண மண்டபத்தில் அய்யா வழி பக்தர்களின் சமய மாநாடு நடந்தது. இதில் அய்யா வழி பிரமுகர்கள் பங்கேற்று பேசினர். இன்று அதிகாலை நாகராஜா கோவில் திடலில் இருந்து சாமிதோப்புக்கு பிரமாண்ட பேரணி தொடங்கியது. இதில் பங்கேற்க இரவில் இருந்தே நாகராஜா கோவில் திடலில் பக்தர்கள் குவியத் தொடங்கினர்.

குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் நெல்லை, துாத்துக்குடி, உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளாவில் இருந்தும் நேற்றே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாகர்கோவில் வந்தனர்.

தொடர்ந்து இன்று காலை நாகர்கோவில் நாகராஜாகோவில் திடலில் இருந்து சுவாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டரின் தலைமை பதி நோக்கி அய்யா அவதார தினவிழா பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. பேரணியின் முன்பாக அய்யாவின் ‘அகிலதிரட்டு” புத்தகத்தை, காவிக்கொடி பக்தர்கள் பூப்பல்லக்கில் எடுத்து சென்றனர்.

ஊர்வலத்துக்கு பால பிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கிச் சென்றார். ஊர்வலத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அகிலத்திரட்டு ஏந்திய அய்யாவின் வாகனம் முன் செல்ல, அதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அணிவகுத்து சென்றனர்.

இதில் காவி உடை அணிந்தபடி கையில் காவிக்கொடிகளை ஏந்தியபடி பக்தர்கள் அய்யா சிவ சிவ என்ற பக்தி கோ‌ஷத்தை எழுப்பியவாறு சென்றனர். மேலும் பல பக்தர்கள் தலையில் சந்தனக் குடம் சுமந்து சென்றனர். பல இடங்களில் சுருள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

ஊர்வலத்தில் சிறுவர், சிறுமிகள் கோலாட்டம் ஆடியபடி சென்றனர். அய்யா வைகுண்டரின் ஊர்வலத்துக்கு சாதி, மத பேதமின்றி வழிநெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முக்கிய சந்திப்புகளில் செண்டை மேளம், சிங்காரி மேளம் முழங்கவும் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு பானகரம், மோர் போன்ற நீராகாரங்களும், அன்ன தானங்களும் வழங்கப்பட்டன.

ஊர்வலம் சுசீந்திரம், ஈத்தங்காடு, வடக்குத் தாமரைகுளம் வழியாக சாமிதோப்பு தலைமை பதியை அடைந்தது. அங்கு அய்யாவுக்கு பணிவிடை நடந்தது. இதில் பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இதேபோல் பல இடங்களில் இருந்து நடைபயணமாகவும், வாகனங்களிலும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து சாமிதோப்பில் குவிந்தனர். இதனால் சாமி தோப்பில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

சாமிதோப்புப்பகுதி மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதும் உள்ள பதிகள், நிழல் தாங்கல்களிலும் இன்று அய்யா அவதாரதின சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறையும் விடப்பட்டு உள்ளது.

நாஞ்சில் அற்புதம்,
நாகர்கோயில்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments