மீன்களின் இனப்பெருக்கக் காலம் என்பதால், ஒவ்வொரு ஆண்டும் 61 நாள்கள் அமல்படுத்தப்படும் மீன்பிடி தடைக்காலம் வியாழக்கிழமை (ஏப். 15) தொடங்குகிறது.
ஏப்ரல், மே மாதங்களில் மீன்கள் ஆழ்கடலில் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலங்களில் விசைப்படகுகள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றால் மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதோடு, மீன் இனம் அடியோடு அழிந்து விடும்.
மீன் இனத்தை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் இந்த காலத்தில் விசைப்படகுகள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
அதன்படி நிகழாண்டு, தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியான கன்னியாகுமரி கடல் பகுதி முதல் சென்னை திருவள்ளூா் வரையிலான கடற்கரைப் பகுதிகளில் விசைப்படகுகள் ஏப்.15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாள்கள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.
மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகள் மற்றம் இழுவைப் படகுகளை கொண்டு கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், கடற்கரையோரங்களில் ஃபைபர் மற்றும் நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கத் தடையில்லை.
மீன்பிடி தடைக்காலம் தொடங்குவதால், குறைந்த அளவிலேயே மீன்களின் வரத்து இருக்கும் என்பதால், அடுத்த இரண்டு மாதக் காலத்துக்கு மீன்களின் விலை கடும் உயர்வை சந்திக்கும் என்றும் கருதப்படுகிறது.
தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் துறைமுகத்தின் கரையோரப் பகுதியில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.