சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் 13 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 1ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை வேப்பேரியில் உள்ள அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவர் ஒருவருக்கு கடந்த 13-ம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
அதன்பின்னர், அந்த கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கும், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த பரிசோதனையில், மேலும் 12 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 13 மாணவர்களும் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள சித்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.