தமிழகத்தில் 9, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் பள்ளிகளுக்கு வரும் மாணவ, மாணவிகளின் நல்லொழுக்கத்தை பேணி காத்திடும் வகையில் பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி மாணவர்கள், உடைகள், சிகை அலங்காரங்களில் ஒழுக்கத்தை கடைபிடிக்கும்படி அறிவுத்தப்பட்டது.
ஆனால் பல மாணவர்கள் புள்ளிங்கோ ஸ்டைல் என்ற பெயரில் தலைமுடிக்கு பல்வேறு கலர்கள் அடித்தும், தலைமுடியை ஒழுங்கற்ற நிலையிலும் வெட்டிக்கொண்டு பள்ளிக்கு வருகின்றனர்.
இதனால் ஒழுக்க சீர்கேடு ஏற்படுகிறது. இதனை தடுக்கவும், மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கடைபிடிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் 540 பேர் படித்து வருகின்றனர்.
அவர்களில் சிலர் லைன் கட்டிங், டாப் கட்டிங் போன்ற பல்வேறு முறைகளில் சரியான முறையில் தலைமுடியை வெட்டாமல் ஸ்டைலாக வந்துள்ளனர்.
இதனால் பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவர்களை அழைத்து தலைமுடியை ஒழுக்கமாக வெட்டி வர வேண்டும் என்று பல நாட்களாக அறிவுறுத்தி வந்தது. இதை மாணவர்கள் கடைப்பிடிக்காமல் போக்கு காட்டி வந்தனர்.
இதற்கிடையே பள்ளி தலைமை ஆசிரியர் நெப்போலியன், தனது சொந்த செலவில் ஒழுங்கற்ற முறையில் நேற்று பள்ளிக்கு வந்த 100 மாணவர்களுக்கு 2 தொழிலாளர்கள் மூலம் பள்ளி வளாகத்தில் தலைமுடியை திருத்தம் செய்ய ஏற்பாடு செய்திருந்தார்.
ஒவ்வொரு மாணவரின் தலைமுடியும் முறையாக உள்ளதா? என்பதை கண்காணித்து அவர்களுக்கு தலைமுடி திருத்தம் செய்ய உத்தரவிட்டார்.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் நெப்போலியன் கூறுகையில், பள்ளிக்கல்வித்துறை உத்தரவின்படி ஒழுங்கற்ற முறையில் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பெற்றோர் ஒத்துழைப்புடன் தலைமுடி திருத்தம் செய்யப்பட்டது.
நல் ஒழுக்கம் பெற்று நல்ல மாணவர்களாக திகழவேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்ற பணியை தொடங்கினேன். எனது சொந்த செலவில் இப்பணியை மேற்கொள்கிறேன்.
ஒரு மாணவனுக்கு முடி திருத்தம் செய்ய ரூபாய் 60 கட்டணம் கொடுக்கப்படுகிறது. பிளஸ்1 மற்றும் பிளஸ்2 மாணவர்கள் 100 பேருக்கு முடி திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் இதுபோன்று கட்டிங் செய்யப்படும் என்றார்.