கவுகாத்தி
அசாமில் ஆக்கிரமிப்பாளர்களுக்கும், போலீசுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்தனர். ஒன்பது போலீசார் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
வட கிழக்கு மாநிலமான அசாமின் தரங் மாவட்டம் தலாபூர் பகுதியில் 27 ஆயிரம் சதுர அடி பரப்பில் விவசாய திட்டம் ஒன்றை செயல்படுத்த அரசு முடிவு செய்தது. இதையொட்டி அப்பகுதியை ஆக்கிரமித்திருந்த 800 குடும்பங்களை வெளியேற்ற அரசு அதிகாரிகள், போலீசாருடன் சென்றனர். அப்போது ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற மறுத்து போலீசாரை கற்களாலும், உருட்டுக் கட்டைகளாலும் தாக்கினர்.
இதையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தடியடியும் நடத்தினர். ரப்பர் குண்டுகளால் சுட்டனர். இதைத் தொடர்ந்து கூட்டத்தினர் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த காட்சியை படம் பிடித்த கேமராமேனை ஒருவர் கட்டையால் அடித்து ஓட ஓட விரட்டி வந்தார். உடனே போலீசார், விரட்டியவரை சூழ்ந்து தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்து மூர்ச்சையானார். அப்போதும் ஆத்திரம் அடங்காத கேமராமேன், விழுந்து கிடந்தவரை அடித்து தாக்கிய காட்சி சமூக ஊடகங்களில் வெளியானது.இந்த வன்முறையில் இருவர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த ஒன்பது போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு, காங்கிரஸ் எம்.பி ராகுல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில், தலாபூரில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இருவர் மரணம் மற்றும் மோதலில் பலர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.