சொகுசுக்கப்பலில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அவரிடம் அக்டோபர் 7ம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் சமீப காலமாக போதைப்பொருள் வழக்குகளில் அதிகமாக திரை உலகை சேர்ந்தவர்கள் சிக்கி வருகின்றனர். இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து கோவாவிற்கு 3 நாட்கள் சொகுசு கப்பலில் சுற்றுலா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் வந்தது. இந்த சொகுசு கப்பலில் ஒருவர் பயணிக்க ரூ.10 லட்சம் டிக்கெட் என்றும் அதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படுவதாகவும் தெரிய வந்தது.
இந்த சொகுசு கப்பலில் அதிக வசதி படைத்தவர்கள், திரையுலக பிரபலங்கள், மாடலிங் உலகை சேர்ந்தவர்கள் என்று பலரும் கலந்து கொள்வது வழக்கமாகும். இந்த சொகுசு கப்பலில் நடத்தப்படும் விருந்துகளில் போதை பொருட்கள் பயன்படுத்தப்படும் என்று போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் வந்ததை அடுத்து அவர்களும் சாதாரண பயணிகளை போல அந்த கப்பலில் டிக்கெட் எடுத்து பயணித்தனர். இதனை அடுத்து கப்பல் கிளம்பிய சில நிமிடங்களில் கப்பலில் பலரும் போதைப்பொருள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
இதனால் அதிகாரிகள் அங்கு திடீரென்று சோதனை நடத்த தொடங்கினர். அங்கு போதை பொருள் பயன்படுத்தியவர்கள், வைத்திருந்தவர்கள் என்று 20க்கும் மேற்பட்டவர்களை பிடித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதன்பின்னர், ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், அவரது நண்பர்கள் அர்பாஸ் மெர்சன்ட், மூன்மூன் தபேச்சா போன்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இன்று அவர்களின் ஜாமீன் மனு நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டு காவல் துறையினரின் காவலில் வைத்து அக்டோபர் 7ம் தேதி வரை விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.