மிசோராம் மாநிலத்தில் அதிக குழந்தை பெற்ற பெற்றோருக்கு அம்மாநில அமைச்சர் பரிசுகள் வழங்கி பாராட்டியுள்ளார்.
மிசோரம் மாநிலத்தில் பூர்வீகக் குடிகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. அந்த எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக மிசோரம் விளையாட்டுத்துறை அமைச்சர் ராபர்ட் ரோமாவியா வித்தியாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். தனது அய்சால் கிழக்குத் தொகுதியில் அதிக குழந்தைகளை பெறும் பெற்றோருக்கு பரிசுகள் வழங்குவதாக அறிவித்தார். இதன்படி துய்தியாங் பகுதியை சேர்ந்த 15 பிள்ளைகள் பெற்றிருக்கும் பெண் ஒருவருக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கி கவுரவித்தார். அடுத்தபடியாக 13 பிள்ளைகள் பெற்ற பெண்ணுக்கு 30 ஆயிரம் ரூபாயும், 12 பிள்ளைகள் பெற்ற தலா 3 பேருக்கு பரிசாக 20 ஆயிரம் ரூபாயும் வழங்கி அமைச்சர் கவுரவித்தார்.
மற்ற மாநிலங்களில் சதுர கிலோ மீட்டருக்கு சராசரியாக 500 பேர் வசிப்பதாகவும், ஆனால் தங்கள் மாநிலத்தில் 52 பேர் மட்டுமே வசிப்பதால் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராபர்ட் தெரிவித்தார்.