Wednesday, January 15, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாதேனி காவல்துறையிடம் சிக்கிய ஆன்லைனில் கடன் வழங்கும் புனே மோசடி கும்பல்

தேனி காவல்துறையிடம் சிக்கிய ஆன்லைனில் கடன் வழங்கும் புனே மோசடி கும்பல்

ஆன்லைன் கடன் மோசடி புகாரில் வங்கிக் கணக்கை ஆய்வு செய்ததில் மூன்று மாதத்தில் 11 கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனையும் மோசடியும் செய்ததாக புனேயைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட கும்பலை தேனி சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்.

மதுரை சிக்கந்தர் சாவடி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (35) என்பவர் தேனி பெரியகுளம் சாலையில் புத்தகக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர், ஸ்பீட் லோன் என்ற சமூக வலைதளம் மூலம் கடன் வழங்கும் நிறுவனத்தில் ஆறாயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதையடுத்து கடன் நிறுவன நிபந்தனையின் படி, கடன் வழங்கும் நிறுவனத்தின் யூபிஐ ஐடியில் பணத்தை செலுத்தியுள்ளார்.

ஆனால், அந்த கணக்கில் பணம் வரவில்லை எனக் கூறி அந்த நிறுவனம் ராஜேஷ்குமாரை மிரட்டி பல தவணையாக பலமுறை பணத்தை வசூலித்துள்ளது. இதனால் விரக்தியடைந்த ராஜேஷ்குமார், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவின் உமேஷிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் விசாரணையை துவக்கிய தேனி சைபர் கிரைம் போலீசார், அந்த குறிப்பிட்ட சமூக வலைத்தளம் மூலம் கடன் வழங்கும் நிறுவனத்தின் யூபிஐ ஐடியை பரிசோதனை செய்தனர். அந்த கணக்கில் 7 வங்கிக் கணக்குகள் இணைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அவற்றில் ஆறு கணக்குகள் நிறுவனத்தின் பெயரிலும், ஒரு கணக்கு மட்டும் தனிநபர் பெயரிலும் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த தனிநபரின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்ததில் கடந்த 2022 மார்ச் முதல் மே வரையிலான மூன்று மாத காலத்தில் மட்டும் 11 கோடி ரூபாய் அளவிற்கு வங்கிப் பரிவர்த்தனைகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது பொது மக்களிடம் இருந்து ஏமாற்றி மோசடி செய்த பணம் என்பதும் தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து அந்த தனிநபர், மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. இதையடுத்து தேனி சைபர் க்ரைம் போலீசார், புனே சென்று, பிரபுல், மஹரந்த், ராஜேந்தர் மற்றும் தயானேஷ்வர் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1லட்சம் ரூபாய் ரொக்க பணம், 10-க்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்டு மொபைல் போன்கள், இரண்டு கம்ப்யூட்டர், ஸ்கேனர், பிரிண்டர், ஏடிஎம் மற்றும் சிம் கார்டுகள், கடன் வழங்கும் ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட 4 பேரும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்படும் சைபர் க்ரைம் பிரிவிற்கு கொண்டு வரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த மோசடியில் மேலும் பலர் ஈடுபட்டிருக்கக்கூடும், பல கோடி ரூபாய் மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளதாக சைபர் க்ரைம் போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேரிடம் தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

Recent Comments