Wednesday, January 15, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்6 பேர் விடுதலை, மிகுந்த மன நிறைவுடன் இருக்கிறேன் - பழ. நெடுமாறன்

6 பேர் விடுதலை, மிகுந்த மன நிறைவுடன் இருக்கிறேன் – பழ. நெடுமாறன்

6 பேர் விடுதலை! 31ஆண்டுக் கால மக்கள் போராட்டம் மாபெரும் வெற்றி!
26 தமிழர் உயிர்க் காப்புக் குழுவின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முன்னாள் தலைமையமைச்சர் இராசீவ்காந்தி படுகொலை வழக்கில் 26 தமிழர்கள் கொலை குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் மீதான வழக்கு தடாச் சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்டது. சென்னை பூந்தமல்லியிலிருந்த தடா சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுக்காலம் நடைபெற்று, 1998ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி 26 தமிழர்களுக்கு ஒட்டுமொத்தமாகத் தூக்குத் தண்டனை விதிக்கும் தீர்ப்பைத் தடா நீதிமன்றம் வழங்கியது. இதற்கு எதிராக இந்தியாவிலும் உலக நாடுகளிலும் உள்ள மனித உரிமை அமைப்புகள் நீதித்துறையின் படுகொலை என இதைக் கண்டித்தன.
26 பேர்களில் 13 பேர் ஈழத் தமிழர்கள். 13 பேர் நம்முடைய தமிழ்நாட்டுத் தமிழர்கள். இந்த வழக்கை உச்சநீதிமன்றத்திற்குத்தான் மேல்முறையீடு செய்ய முடியும் என்பது தடாச் சட்டத்தின் விதியாகும். எனவே உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கை நடத்துவதற்காக மறுநாளே ஒரு கூட்டத்தைக் கூட்டினேன். 60க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் இதில் பங்கேற்றன. என்னுடைய தலைமையில் 26 தமிழர் உயிர்க் காப்புக் குழு அமைக்கப்பட்டது. இந்த வழக்கை இந்தியாவின் மிகச் சிறந்த வழக்கறிஞர்களில் ஒருவரான மதிப்பிற்குரிய என். நடராசன் அவர்கள் வாதாட வேண்டுமென முடிவு செய்து அவரை அணுகினோம். அவரும் ஏற்றுக்கொண்டு, இந்த வழக்கை நடத்த முன்வந்து, உச்சநீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வுக்கு முன்னால் வாதாடினார். அவருக்கு உதவியாக மற்றும் பல வழக்கறிஞர்கள் துணை நின்றார்கள்.

தடாச் சட்டத்தின் கீழ் இந்த வழக்குத் தொடுக்கப்பட்டதே செல்லாது என நடராசன் அவர்கள் வாதாடியதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இது ஒரு முக்கியமான திருப்பமாகும். சாதாரண குற்றவியல் சட்டத்தின்கீழ் தொடுக்கப்படவேண்டிய வழக்கே தவிர, கொடிய சட்டத்தின்கீழ் தொடுக்கவேண்டிய வழக்கு அல்ல என்ற அந்த தீர்ப்புதான் இன்று 6பேரின் விடுதலை வரைக்கும் உதவியிருக்கிறது.

1999ஆம் ஆண்டு மே-11ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில் நால்வருக்குத் தூக்குத் தண்டனையும், மூவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது. 19 பேரைக் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்தது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வரின் சார்பில் நாங்கள் அப்போதைய ஆளுநர் பாத்திமா பீவி அவர்களிடம் கருணை மனு அளித்தோம். ஆனால் அதை ஏற்க மறுத்து தள்ளுபடி செய்துவிட்டார். அப்போது ஆளுநரின் ஆணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நாங்கள் தொடுத்த வழக்கில் பிற்காலத்தில் நீதியரசரும், அன்றைய மூத்த வழக்கறிஞருமான மதிப்பிற்குரிய சந்துரு அவர்கள் வாதாடி வெற்றி தேடிக் கொடுத்தார். இந்திய நீதிமன்ற வரலாற்றிலேயே ஆளுநரின் ஆணை செல்லாது என்ற தீர்ப்பினை சந்துரு அவர்கள் பெற்றுத்தந்தார்.

தொடர்ந்து நாங்கள் குடியரசுத் தலைவருக்குக் கருணை மனு அளித்தோம். பிறகு தமிழ்நாட்டில் மட்டுமல்ல, மற்ற தென்மாநிலங்களிலும் மரண தண்டனை ஒழிப்பு இயக்கத்தை விரிவாக்கினோம். உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் உட்படப் பல அறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோர் இந்த இயக்கத்தின் மாநாடுகள், கருத்தரங்குகள் ஆகியவற்றில் பங்கேற்றார்கள். இடைவிடாத மக்கள் இயக்கத்தின் விளைவாக அன்றைய அதிமுக அமைச்சரவையிலும், இன்றைய திமுக அமைச்சரவையிலும் 7பேரின் விடுதலைக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், ஆளுநர்கள் இந்த தீர்மானங்களைச் சற்றும் மதிக்காமல் கிடப்பில் போட்டுவிட்டனர்.

பின்னர் நாங்களும், பல்வேறு கட்சியினரும் தொடர்ந்து வற்புறுத்தியதின் விளைவாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடுத்தது. அதன் விளைவாக உச்சநீதிமன்றம் முதலில் ஒருவரையும், இப்போது 6பேரையும் விடுதலை செய்துள்ளது.

30 ஆண்டுக்கால மக்கள் இயக்கம் இறுதியாக மாபெரும் வெற்றிபெற்றதைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். மிகுந்த மன நிறைவுடன் இருக்கிறேன். 26 தமிழர் உயிர்க் காப்புக் குழுவில் அங்கம் வகித்த அமைப்புகளுக்கும், வாதாடிய என். நடராசன் மற்றும் வழக்கறிஞர்களுக்கும், நிதியுதவி நல்கிய மக்களுக்கும், எங்களுக்கு ஆதரவாக நின்ற மற்ற கட்சித் தலைவர்களுக்கும், ஆதரவாகச் செய்திகள் வெளியிட்ட பத்திரிகையாளர்களுக்கும் இக்குழுவின் சார்பில் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

- Advertisment -

Most Popular

Recent Comments