மதுரை
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நீட் தேர்வு விலக்கு கோரிக்கை வலியுறுத்தினேன் என்று பிரதமரை சந்தித்த தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். நீட் தேர்வு விலக்கு அதனுடைய ரகசியம் எங்கள் பாக்கெட்டில் இருக்குது என்று சொன்னவர், இன்றைக்கு நீட் தேர்வு விலக்குக்கு சட்ட போராட்டம் தொடரும் என்று சொல்லி இருக்கிறார். முதல் கையெழுத்து நீட் தேர்வு விலக்கு என்று சொன்னார்களே, இன்றைக்கு 22 மாதங்கள் ஓடிவிட்டது, நீட் ரத்து நிலைமை என்ன?
மூத்த அமைச்சர்கள் இல்லாமல், நேற்று அமைச்சரானவர் இன்றைக்கு பிரதமரை சந்திக்கிறார். முதலமைச்சர் இங்கு தமிழ்நாட்டில் இருக்கும்போது சந்தித்திருக்கிறார், அவர் வெளிநாட்டுக்கு சென்று இருந்தால் கூட இது மரபாக நினைக்கலாம். ஆனால் முதலமைச்சர் தமிழ்நாட்டில் இருக்கிற போது அவர் அமைச்சரவையில் இருக்கிற விளையாட்டுத்துறை அமைச்சர் சந்திப்பது மரபுக்கு உட்பட்டதாக இல்லை.
பிரதமரை உதயநிதி ஸ்டாலின் சந்தித்திருப்பது என்பது முழுக்க முழுக்க உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப்படுத்துகிற நடவடிக்கையாக, ஒரு முக்கிய அங்கமாகத்தான் சந்தித்திருக்கிறாரே தவிர, தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த பயனும் இல்லை. மூத்த பாராளுமன்ற உறுப்பினர்களை தன்னுடன் அழைத்துச் செல்லவில்லை, மூத்த அமைச்சர்களை அழைத்து செல்லவில்லை. எதற்காக?
ஒருவேளை தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரதமரை வாய்க்கு வந்ததை, வசை பாடியதை மன்னிப்பு கேட்பதற்காக தனியாக சென்றாரோ? என்னவோ?. அது பிரதமருக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் மட்டுமே தெரியும். 39 பாராளுமன்ற உறுப்பினர்களை கையில் வைத்துக்கொண்டு பாராளுமன்றத்தை நீங்கள் நீட் தேர்வுக்காக முடக்க வேண்டாமா? செங்கலை காட்டியே நீங்கள் காலத்தை கழித்து விடலாம் என்று நினைத்தால் அது உங்களுடைய செங்கோலுக்கு அழகாக இருக்காது. செங்கலை காட்டியே நீங்கள் காலத்தை கழித்து விடலாம் என்று நினைத்தால் மக்கள் அதை நம்ப தயாராக இல்லை. எத்தனை காலம் தான் ஏமாற்றுவார். இந்த நாட்டிலே இந்த நாட்டிலே என்கிற அந்த பாடல் தான் தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.