“லைஃப்” திட்டத்தில் 4 அடுக்குமாடி வீடுகள் மேலும் 174 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. கேரள அரசால் கட்டப்பட்ட நான்கு அடுக்குமாடி வீட்டு வளாகங்களில் நிலமற்ற, வீடில்லாத 174 குடும்பங்களுக்கு வீடு வழங்கும் விழாவை முதலமைச்சர் பினராயி விஜயன் ஏப்.8ந் தேதி தொடங்கி வைத்தார்.
கடுமையான வறுமை இல்லாத மாநிலமான கேரளத்தில் அனைவருக்கும் சொந்த வீடு கனவு நனவாகும் என்று அப்போது முதல்வர் கூறினார்.
கடம்பூர் தவிர, கொல்லம் மாவட்டம் புனலூர், கோட்டயம் மாவட்டம் விஜயபுரம், இடுக்கி மாவட்டம் கரிமன்னூர் ஆகிய இடங்களில் குடியிருப்பு வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டிய 100 நாள் செயல் திட்டத்தின் படி இந்த வீட்டுத் தொகுப்புகள் கட்டி முடிக்கப்பட்டன.
இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒரு முன் அறை, இரண்டு படுக்கையறைகள் மற்றும் ஒரு சமையலறை ஆகியவற்றைக் கொண்டுள்ளன. மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கண்ணூர் மாவட்டம் கடம்பூரில் மட்டும் 44 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கிடைத்துள்ளன. கடம்பூரில் 44 பயனாளிகளுக்கு சாவியை முதலமைச்சர் வழங்கினார்.
விழாவுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எம்.பி. ராஜேஷ் தலைமை வகித்தார். புனலூரில் அமைச்சர்கள் கே.என்.பாலகோபால், ஜெ. சிஞ்சுராணி ஆகியோர் சாவியை வழங்கினர். கோட்டயம் விஜயபுரத்தில் அமைச்சர் வி.என்.வாசவனும், இடுக்கி கரிமண்ணூரில் அமைச்சர் ரோஷி அகஸ்டினும் பயனாளிகளிடம் சாவிகள் வழங்கினர்.