Wednesday, April 24, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாஅத்திக் அகமது கொல்லப்பட்டது எப்படி? - உ.பி யை அதிரவைத்த சம்பவத்தின் பின்னணி

அத்திக் அகமது கொல்லப்பட்டது எப்படி? – உ.பி யை அதிரவைத்த சம்பவத்தின் பின்னணி

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் (அலகாபாத்) பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு நிழல் உலக தாதாவும், முன்னாள் எம்.எல்.ஏவுமான அத்திக் அகமது, காவலர்களால் அழைத்து வரப்பட்ட போது சுட்டுக் கொல்லப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வந்த போது அவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் அவரது சகோதரர் அஷ்ரப் அகமதுவும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை தொடர்பாக போலீஸ் கஸ்டடியில் அவர்கள் இருவரும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த மாநிலத்தில் உள்ள தூமங்கஞ்ச் காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த கொலை சம்பவத்தை அடுத்து உத்தரப் பிரதேச மாநிலத்தில் 75 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மூன்று பேர் போலீஸில் சரண் அடைந்துள்ளதாக தகவல். .

சனிக்கிழமை (ஏப்ரல் 15) பின்னிரவு நேரத்தில் போலீஸ் கஸ்டடியில் இருந்த அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது பிரயாக்ராஜ் பகுதியில் அமைந்துள்ள மோதிலால் நேரு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக போலீஸாரால் அழைத்து வரப்பட்டனர். இருவரது கையிலும் விலங்கு பூட்டப்பட்டு இருந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. மருத்துவமனைக்குள் அவர்கள் இருவரும் அழைத்து வரப்பட்டனர்.

அந்த சமயத்தில் அவர்களிடம் செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் சூழ்ந்தனர். செய்தியாளர்களை போல மைக், கேமரா என கூட்டத்தோடு கூட்டமாக சம்பவ இடத்தில் இருந்த மூன்று பேர் திடீரென தங்கள் கையில் இருந்த துப்பாக்கியை கொண்டு அத்திக் அகமதுவை சுட்டுள்ளனர். தொடர்ந்து அஷ்ரப் அகமதுவையும் சுட்டுள்ளனர். திடீரென துப்பாக்கி சூடு நடந்ததால் அங்கு குழுமியிருந்த அனைவரும் பதற்றம் அடைந்து ஓட்டம் பிடித்துள்ளனர். இந்தக் காட்சி நேரலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் அத்திக் அகமதுவை மிக அருகில் (பாயிண்ட் பிளாங்க்) குறிவைத்து சுட்டு வீழ்த்தியது தெரிகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் அவரது மகன் ஆசாத் அகமது என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். மகனின் இறுதிச் சடங்கில் கூட பங்கேற்க அத்திக் அகமதுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவர் உடன் இருந்த சகோதரர் அஷ்ரப் அகமதுவும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மொத்தம் 36 ரவுண்டுகள் அவர்கள் மீது சுடப்பட்டுள்ளது.

இந்த கொலை அம்மாநில காவல் துறையின் மீது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்பு இருந்தும் அத்திக் மற்றும் அஷ்ரப் கொலை செய்யப்பட்டது எப்படி? துப்பாக்கி ஏந்திய போலீஸார் கொலையாளிகளுக்கு எதிராக ஏன் தாக்குதல் நடத்தவில்லை? குற்றவாளிகளான அத்திக் மற்றும் அஷ்ரப்பை பல்வேறு தருணங்களில் செய்தியாளர்கள் நெருங்க அனுமதித்தது ஏன்? என காவல் துறையை நோக்கி பல்வேறு கேள்வி முன்வைக்கப்படுகிறது.

அத்திக் மற்றும் அஷ்ரப்பை கொலை செய்த பிறகு நொடி பொழுதில் கொலையாளிகள் மூவரும் காவலர்களிடம் சரண் அடைந்துள்ளனர். சரண் அடைந்தவர்களின் பெயர்கள் லாவ்லீன் திவாரி, அருண் மற்றும் சன்னி என தெரியவந்துள்ளது. காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சகோதரர்கள் இருவரையும் கொலை செய்த பிறகு ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என அவர்கள் மூவரும் முழக்கமிட்டதாகவும் தகவல். இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து அந்த மாநிலம் முழுவதும் அலர்ட் செய்யப்பட்டுள்ளது.

அத்திக் அகமது கொலை செய்யப்படும் காட்சியை யாரும் சமூக வலைதளத்தில் பகிர வேண்டாம் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைக்க போலீஸார் கொடி அணிவகுப்பு மாநிலம் முழுவதும் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

- Advertisment -

Most Popular

Recent Comments