Thursday, September 28, 2023
Home Uncategorized நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முடிவெடுத்துள்ளது.

நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தை மக்களவைத் தலைவர் திரு.ஓம் பிர்லா அவர்கள் தலைமையில் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு முரணானதாகும். அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு எண் 79 நாடாளுமன்றத்தில் இரு அவைகளுக்கும் தலைவர் குடியரசுத் தலைவரே என உறுதிபடத் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற அவைகளின் கூட்டத்தைக் கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் படைத்தவர் குடியரசுத் தலைவரே ஆவார். நாடாளுமன்ற அவைகளில் விவாதித்து நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளித்தால்தான் அவை சட்டங்கள் ஆகும். அத்தகைய சிறப்பு அதிகாரங்கள் கொண்ட குடியரசுத் தலைவரை அவமதிக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு நடந்து கொள்கிறது. நாடாளுமன்றக் கட்டடத்தைக் குடியரசுத் தலைவர் திறந்து வைத்திருக்க வேண்டும்; அல்லது அவரது தலைமையில் இவ்விழாவை நடத்தியிருக்க வேண்டும். அதுதான் ஜனநாயக மாண்புகளைக் காக்கும் மரபாகும். ஆனால், அதனைப் புறக்கணித்து அவரது பெயரைக் கூட அழைப்பிதழில் குறிப்பிடாமல் குடியரசுத் தலைவரை அவமதிக்கும் நோக்கில் நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழா நடைபெறுகிறது. பழங்குடி சமூகத்தைச் சார்ந்தவரை நாங்கள் குடியரசுத் தலைவராக ஆக்கி இருக்கிறோம் என்று தேர்தல் ஆதாயத்துக்காகப் பேசிய பாஜக, தற்போது அவரை ஓரங்கட்டுவதும் அவமதிப்பதும் அவர் பழங்குடியினத்தவர் என்பதால் தானா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டுகிற நேரத்தில் அப்போதைய குடியரசுத் தலைவராக இருந்த
திரு. ராம்நாத் கோவிந்த் அவர்களும் அழைக்கப்படவில்லை. அதுவும் அவர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தான் புறக்கணிக்கப்பட்டாரா ? என்ற அய்யமும் எழுகிறது. பிறப்பின் அடிப்படையில் மக்களிடையே ஏற்றத்தாழ்வைக் கற்பிக்கும் சனாதனக் கொள்கையை உயிர்மூச்சாகக் கொண்டு செயல்படுகிற கட்சி பாரதிய ஜனதா கட்சி; அரசியலமைப்புச் சட்டத்தைவிட மனுநூல் மீது அதிக நம்பிக்கை கொண்ட கட்சி என்பதை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

அதுமட்டுமின்றி, நாடாளுமன்ற கட்டடத்தைத் திறப்பதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள நாளான மே -28 என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கையே இல்லாத வி.டி. சாவர்க்கரின் பிறந்த நாளாகும். வன்முறைப் பாதையில் நம்பிக்கை கொண்ட சாவர்க்கர், இந்த நாட்டில் வகுப்புவாத வெறுப்பு அரசியலுக்கு அடித்தளமிட்டவர். அவருடைய பிறந்த நாளில் நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறக்கப்படுவது நாடாளுமன்ற ஜனநாயகத்தையே கேலிக்கூதாக ஆக்கியுள்ளது.

இந்நிலையில் மாண்புமிகு குடியரசுத் தலைவரையும், நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளையும் அவமதிக்கும் வகையில் இந்தத் திறப்பு விழாவை நடத்தும் பாஜக அரசின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். அத்துடன், இந்தத் திறப்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணிக்கிறோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம் எனக் கூறியுள்ளார்.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments