இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், முதுநிலை நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் பூஜ்யமாக இருந்தாலும் எம்.டி, எம்.எஸ். படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று ஒன்றிய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்திருக்கிறது.
“ஏற்கெனவே பதிவு செய்துள்ள விண்ணப்பத்தாரர்கள் மீண்டும் பதிவுசெய்யத் தேவையில்லை. இருப்பினும், அவர்கள் தங்கள் விருப்பங்களைத் திருத்த அனுமதி அளிக்கப்படும். அவர்கள் மருத்துவ கலந்தாய்வுக் குழு இணையதளத்துடன் தொடர்பு கொள்ளலாம்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு தான் தகுதி என்று ஒன்றிய பாஜக அரசு விடாப்பிடியாக இருந்து வரும் நிலையில், தற்போது முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றிருந்தாலும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று அறிவித்திருப்பதன் மூலம் நீட் முடிவு தேர்வு வெறும் கண்துடைப்பு என்பது வெள்ளிடை மலையாகத் தெரிகிறது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களை தகுதியாகக் கொள்ளாமல், நீட் கட்டாயம் என்று கூறும் ஒன்றிய அரசு, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு எழுதி இருந்தால் மட்டும் போதும் மதிப்பெண் ஒரு பொருட்டல்ல என நிர்ணயம் செய்திருக்கிறது.
இதிலிருந்தே மருத்துவக் கல்விக்கு நீட் என்பது ஒரு மோசடியான தகுதித் தேர்வு என்பது தெரிகிறது.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு காரணமாக 20 மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இதே நிலைதான் பிற மாநிலங்களிலும் இருக்கிறது.
எனவே ஒன்றிய பாஜக அரசு மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்துவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.