போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயது 18 ஆக உள்ளது. இதற்கும் குறைவான வயது உள்ள சிறுமிகளிடம் விருப்பத்துடன் அத்துமீறினாலும் போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் பல்வேறு நாடுகளில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயது குறைக்கப்பட்டு வருகிறது. எனவே இந்தியாவிலும் சம்மதத்துடன் பாலியல் உறவுக்கு அனுமதி அளிக்கும் வயதை குறைக்க பல்வேறு தரப்பிலும் இருந்தும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. இதுபற்றி ஒன்றிய அரசு சட்ட ஆணையத்திடம் விளக்கம் கேட்டது. இந்தநிலையில் ஒன்றிய அரசிடம் தற்போது இதுதொடர்பான அறிக்கையை சட்ட ஆணையம் வழங்கி உள்ளது. அதில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16ஆக குறைப்பது நல்லதல்ல என்று கருத்து தெரிவித்து உள்ளது.
கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி தலைமையிலான குழு வழங்கிய அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: போக்சோ சட்டத்தின் கீழ் தற்போதுள்ள சம்மதத்தின் வயதை குறைக்க வேண்டாம். ஏனெனில் பாலியல் சம்மத வயதை 18ல் இருந்து 16ஆக குறைத்தால் குழந்தை திருமணம் மற்றும் குழந்தை கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும். மேலும் இளமைப் பருவ காதலை கட்டுப்படுத்த முடியாது. மேலும் குழந்தை கடத்தல், குழந்தைகளிடம் அத்துமீறல், குழந்தை விபசாரம் உள்ளிட்ட பிரச்னைகளில் வயது குறைத்தல் விருப்பத்தகாத நடவடிக்கை ஆகிவிடும். மாயம் தொடர்பான வழக்குகளில் குற்ற நோக்கத்தில் ஈடுபடுவது போன்ற வழக்குகளில் கூட நீதிமன்றங்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். இருப்பினும் நீதித்துறை பரிந்துரைப்படி மறைமுக ஒப்புதல் விவகாரத்தில் போக்சோ சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். இவ்வாறு சட்ட ஆணையம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.