Monday, February 17, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியா“சஞ்சய் ராய்தான் குற்றவாளி” கொல்கத்தா மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

“சஞ்சய் ராய்தான் குற்றவாளி” கொல்கத்தா மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயது பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் சஞ்சய் ராய்தான் குற்றவாளி எனத் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடந்த இந்த சம்பத்தை தொடர்ந்து, கொல்கத்தா காவல்துறையிடமிருந்து வழக்கை ஏற்றுக்கொண்ட மத்திய புலனாய்வுப் பிரிவு முக்கிய குற்றவாளி சஞ்சய் ராய் என்று தனது விசாரணையில் உறுதிப்படுத்தியது.

இந்நிலையில், இந்த வழக்கில் சியால்டா நீதிமன்ற நீதிபதி அனிர்பன் தாஸ் சிபிஐயின் முதல் குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் குற்றவாளி சஞ்சய் ராய்தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால், தண்டனை குறித்த விபரத்தை திங்கள் கிழமை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 13 ஆம் தேதி சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட நாள்முதல் இந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. 120 க்கும் மேற்பட்ட சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்து 66 நாட்கள் ரகசிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது. குற்ற சம்பவத்தில் சஞ்சய் ராயின் தொடர்பை உறுதிப்படுத்த, டிஎன்ஏ போன்ற உயிரியல் மாதிரிகளின் சோதனை முடிவுகள் சிபிஐயால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

தாக்குதலின் போது பாதிக்கப்பட்டவர் தனது உயிருக்கு போராடியதாகவும், கையால் கழுத்தை நெரித்து பெண் மருத்துவர் கொல்லப்பட்டதும் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும், அவரது உடலில் கண்கள், வாய் மற்றும் அந்தரங்க உறுப்புகளில் கடுமையான இரத்தப்போக்கு உட்பட கொடூரமான தாக்குதலின் அறிகுறிகள் கண்டறியப்பட்டது. அதேபோல், குற்றவாளியின் உடலில் ஐந்து தனித்தனி காயங்கள் இருந்ததும் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த சம்பவத்தை அடுத்து மேற்கு வங்கம் முழுவதும் போராட்டங்கள் வெடித்ததால் இந்த வழக்கு தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது. பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்கவும், மருத்துவ ஊழியர்களுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்கவும் கோரி மருத்துவர்கள் மற்றும் மகளிர் உரிமைகள் குழுக்கள் தலைமையிலான போராட்டங்கள் தீவிரமடைந்தன. நாடுமுழுவதும் போராட்டம் வெடித்த நிலையில் கொல்கத்தா உயர் நீதிமன்றம் விசாரணையை சிபிஐக்கு மாற்றியது. வழக்கில் சஞ்சய் ராயை ஒரே பிரதான குற்றவாளியாகக் குறிப்பிட்டு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யப்பட்டது.

கூடுதலாக, சாட்சியங்களை சிதைத்ததற்காக அக்கல்லுரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் உள்ளூர் காவல் நிலையத்தின் முன்னாள் அதிகாரி அபிஜித் மொண்டல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், 90 நாட்களுக்குள் சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யத் தவறியதால், இருவருக்கும் பின்னர் ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. விசாரணையின் போது இந்த சம்பவம் நாடு முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்களின் பாதுகாப்பு குறித்து நீதிமன்றம் கவலை தெரிவித்திருந்தது. அரசியல் ரீதியாகவும் இந்த விவகாரத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. மாநிலம் முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்தன. கொல்கத்தா காவல் ஆணையர் உட்பட பல மூத்த அதிகாரிகளை இந்த போராட்டங்கள் மாற்ற வழிவகுத்தது.

2024 நவம்பரில் தொடங்கிய விசாரணை, பாதிக்கப்பட்டவரின் பெற்றோர், தடயவியல் நிபுணர்கள் மற்றும் சக ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் நடத்தப்பட்டது. சாட்சிகளின் அடையாளங்களைப் பாதுகாக்க விசாரணை ரகசிய (தனி) நீதிமன்ற அறையில் நடத்தப்பட்டது. விசாரணையின் போது மொத்தம் 50 சாட்சிகள் வாக்குமூலங்களை வழங்கினர்.

மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுக்கு பாதுகாப்பு தேவை என்பதை இந்த வழக்கு எடுத்துக்காட்டுவதால் தீர்ப்பின் மூலம் நீதி கிடைக்கும் என்று நம்புவதாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், குற்றவாளி சஞ்சய் ராய்தான் என்பதை நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், அவருக்கான தண்டனை விபரங்கள் திங்கட்கிழமை (ஜனவரி 20) அறிவிக்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பெண் மருத்துவர் கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டேன் என நீதிமன்றத்தில் சஞ்சய் ராய் தெரிவித்துள்ளார். வரும் 20 ஆம் தேதி நீதிமன்றத்தில் சஞ்சய் ராய் பேச வாய்ப்புத் தரப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisment -

Most Popular

Recent Comments