மும்பை
கொரோனா வைரஸ் மே -15 ம் தேதியுடன் நாட்டை விட்டு போய்விடும் என்று சொன்ன உலகப்புகழ் பெற்ற ஜோதிடர் பேஜன் தருவாலா, கொரோனாவுக்கே பலியான சம்பவம் அவரது அபிமானிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் பேஜன் தருவாலா உலகப்புகழ் பெற்றவர். பல பிரபலங்கள் இவரிடம் அவ்வப்போது தங்களது எதிர்காலம் குறித்து கேட்டறிவர். அவ்வப் போது நாடுகளின் எதிர்காலம், உலக அரசியலின் எதிர்காலம் என விரிவான பல முக்கியக் கணிப்புகளை வெளியிடுவது பேஜன் தருவாலாவின் வழக்கம்.
அதைப்போல, கொரோனா வைரஸ் கிருமி மே 15ம் தேதியுடன் இந்தியாவை விட்டு போய்விடும் என பேஜன் தருவாலா ஆரூடம் சொல்லி இருந்தார். இந்தியா இந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற நெருக்கடிகளைச் சந்தித்தாலும், அடுத்த ஆண்டு பீனிக்ஸ் பறவை போல எழுந்து நிற்கும் எனவும் அவர் கூறியிருந்தார். இதுதான் பேஜன் தருவாலா சொன்ன கடைசி ஆரூடமும் கூட.
ஆனால், இறுதியில் அவருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 90 வயது நிறைந்த பேஜன் தருவாலாவுக்கு ஏற்கனவே முதுமை காரணாக உடலில் பல நோய்கள் இருந்ததால், கொரோனா எளிதில் தொற்றியதுடன் சிகிச்சையும் பலனளிக்கவில்லை என அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.