செங்கல்பட்டு மாவட்டம், மதுராங்கத்தை அடுத்த ஜமீன் எண்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேதாச்சலம் (80). இவர் மனைவி செந்தாமரை (72). இந்த முதிய தம்பதி நேற்றிரவு, வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது, தொடர் மழை காரணமாக அவர்களின் வீட்டு மண் சுவர் நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்தது. அதில், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கணவன் – மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நள்ளிரவு நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதால் தம்பதி உயிரிழந்தது யாருக்கும் தெரியவில்லை.
இந்த நிலையில், முதிய தம்பதியின் பேத்தி இன்று காலை இருவருக்கும் டீ கொடுப்பதற்காகச் சென்றிருக்கிறார். அப்போது, வீட்டின் சுவர் இடிந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர், உடனடியாக கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்திருக்கிறார். பின்னர், இடிந்து கிடந்த வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, கணவன் – மனைவி இருவரும் மண் சுவர் விழுந்து இறந்து கிடந்தனர். அதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக சித்தாமூர் போலீஸாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.



