துருக்கி மற்றும் சிரியாவில் அதிகாலை 2 முறை அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டில் 30 முறை அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்து இருக்கின்றனர். தொடர் நில அதிர்வுகளால் மீட்புப்பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
தெற்கு மத்திய துருக்கி மற்றும் வட சிரியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.8 என்ற ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் பதிவான நிலையில், அடுத்த நிலநடுக்கம் 7.5 என்ற ரிக்டர் அளவில் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தில் துருக்கி மற்றும் சிரியாவை சேர்ந்த 1,600 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்து இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து உள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.
சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து 30 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டு இருப்பதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்து இருக்கிறது. ரிக்டரில் 4 என்ற அளவில் இந்த நில அதிர்வுகள் பதிவானதாக அமெரிக்க புவியியல் நிலையம் கூறியுள்ளது. இந்த தொடர் நில அதிர்வுகளால் மீட்புப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
ஒரு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டால், அதன் தொடர்ச்சியாக லேசான நில அதிர்வுகள் தொடர்ந்து ஏற்படுவது வழக்கம். இதன் பெயர் ஆஃப்டர் ஷாக் என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். இது சில மணி நேரங்கள், நில நாட்கள், சில வாரங்கள், சில மாதங்கள், சில ஆண்டுகள் வரையிலும் தொடரும் என்று கூறப்படுகிறது.