Thursday, March 28, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeகட்டுரைபொருளாதார மந்த நிலையும், திணறும் ஜி.எஸ்.டி பகிர்ந்தளிப்பு நிதிப் பற்றாக்குறையும் - திணறும் மத்திய அரசு

பொருளாதார மந்த நிலையும், திணறும் ஜி.எஸ்.டி பகிர்ந்தளிப்பு நிதிப் பற்றாக்குறையும் – திணறும் மத்திய அரசு

இந்தியா முழுக்க ஒரு வித பொருளாதார மந்த நிலை நிலவிக் கொண்டு இருப்பதை அனைத்து தரப்பினரும் உணருகிறார்கள். இந்த பொருளாதார மந்த நிலையினால் வியாபாரிகளுக்கு வியாபாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே மத்திய அரசுக்கு ஜி.எ.ஸ்.டி (சரக்கு மற்றும் சேவை வரி) மற்றும் நேரடி வரிகள் மூலம் வர வேண்டிய வரி வருவாய் பெரிய அளவில் சரிந்துள்ளது.

இந்த நிலையை சரி செய்ய, மத்திய அரசு இந்த நிதி ஆண்டில் மீதம் இருக்கும் மாதங்களுக்கு ஜி.எஸ்.டி வருவாய் இலக்கை அதிகரித்து இருக்கிறது. இப்போது ஜி.எஸ்.டி மூலம் வரும் வருவாய் குறைவது மட்டும் பிரச்சனை இல்லை. இந்த ஜி.எஸ்.டி வரி வருவாய் குறைவால், மாநில அரசுகளுக்கு கொடுக்க வேண்டிய வரித் தொகையையும் ஒழுங்காகக் கொடுக்க இயலவில்லை.

இந்த 2019 – 20 நிதி ஆண்டில் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு கொடுக்க வேண்டிய பங்குத் தொகை சுமாராக 59,500 – 77,000 கோடி ரூபாயாக இருக்கலாம் எனக் கணித்துள்ளது இக்ரா (ICRA) அமைப்பு. இந்த தொகை 2019 – 20 பட்ஜெட்டில், மாநில அரசுகளுக்கு கொடுப்பதாகச் சொன்ன தொகையை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலங்கள் சுதந்திரமாக செலவழிக்க கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்கவில்லை என்றால் மாநில அரசுகள் கேள்வி எழுப்பும். ஏற்கனவே சில மாநில நிதி அமைச்சர்கள் நேரடியாக நிதி அமைச்சரைச் சந்தித்து தங்கள் பங்கை கேட்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதோடு, இந்த 2019 – 20 நிதி ஆண்டில் ஜி.எஸ்.டி நஷ்டஈடுத் தொகையாக ஒன்பது மாநிலங்களுக்கு மட்டும் சுமார் 60,000 – 70,000 கோடி ரூபாய் வரை கொடுக்க வேண்டி இருக்கும் எனவும் கணித்துச் சொல்லி இருக்கிறது இக்ரா. இப்படி ஜி.எஸ்.டி வரி வருவாய் சரிவினால், ஒரு பக்கம் பங்கீட்டுப் பிரச்னைகள் இருக்கிறது என்றால், மறு பக்கம் நிதிப் பற்றாக்குறை பெரிய பிரச்னையாக இருக்கிறது.

இந்த 2019 – 20 நிதி ஆண்டில் நிர்ணயித்த நிதிப் பற்றாக்குறை (Fiscal Deficit) அளவை எப்போதோ கடந்து விட்டோம். இதை இழுத்துப் பிடிக்க வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறது மத்திய அரசு. கிட்டத் தட்ட ஜி.எஸ்.டியில் இருந்து நிர்ணயித்த அளவுக்கு வரி வருவாய் இல்லை என்பதால், இந்த பிரச்னைகளை சமாளித்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.

இந்த இக்கட்டான சூழலை மத்திய அரசு எப்படி சரி செய்யப் போகிறது? மாநில அரசுகளுக்குக் கொடுக்க வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரி நஷ்டஈடுத் தொகையை எப்படி ஒழுங்காகக் கொடுக்கப் போகிறது? அப்படி கொடுப்பதாக இருந்தாலும் எங்கிருந்து நிதியைத் திரட்டும் என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments