ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஜி.எஸ். லக்ஷ்மி நடுவராகப் பணியாற்றவுள்ளார். சர்வதேச ஆடவர் கிரிக்கெட் போட்டியில் பெண் நடுவர் ஒருவர் பணியாற்றவுள்ளது இதுவே முதல்முறை.
டிசம்பர் 8 அன்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய அரபு அமீரகம் – அமெரிக்கா இடையிலான சர்வதேச ஒருநாள் ஆட்டத்தில் லக்ஷ்மி நடுவராகப் பணியாற்றவுள்ளார்.
இது லக்ஷ்மியின் இரண்டாவது சாதனையாகும். ஐசிசியின் சர்வதேச நடுவர் பட்டியலில் இடம்பிடித்த முதல் பெண் என்கிற சாதனையைச் சமீபத்தில் படைத்தார். 51 வயது லக்ஷ்மி, 2008-09-ல் உள்ளூர் மகளிர் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றினார். இதுவரை 3 மகளிர் ஒருநாள், 16 ஆடவர் டி20, 7 மகளிர் டி20 ஆட்டங்களில் நடுவராகப் பணியாற்றியுள்ளார்.