பாரத ரிசர்வ் வங்கியின் அன்னிய செலாவணி கையிருப்பு, பிப்ரவரி 7ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 170 கோடி டாலர் அதிகரித்து 47,300 கோடி டாலராக அதிகரித்து இருக்கிறது. ஜனவரி 31ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் 461 கோடி டாலர் அதிகரித்து 47,130 கோடி டாலராக இருந்தது.
ரிசர்வ் வங்கியின் அன்னியச் செலாவணி கையிருப்பில் பவுண்டு, யூரோ, யென் போன்ற இதர நாட்டு செலாவணிகள், தங்கம், எஸ்.டீ.ஆர் மற்றும் பன்னாட்டு நிதியத்திடம் உள்ள இருப்பு நிதி ஆகியவை இடம் பெற்றுள்ளன. அன்னிய செலாவணி கையிருப்பு டாலரில் மறுமதிப்பீடு செய்யப்படுகிறது. எனவே டாலரின் வெளிமதிப்பில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஏற்ப அன்னிய செலாவணி கையிருப்பு மதிப்பில் மாற்றம் ஏற்படுகிறது.
கணக்கீட்டுக் காலத்தில் ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் உள்ள இதர செலாவணிகளின் மதிப்பு 194 கோடி டாலர் அதிகரித்து 43,919 கோடி டாலராக இருக்கிறது. கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு 22 கோடி டாலர் சரிவடைந்து 2,878 கோடி டாலராக உள்ளது. எஸ்.டீ.ஆர். மதிப்பு 20 லட்சம் டாலர் குறைந்து 144 கோடி டாலராக இருக்கிறது. பன்னாட்டு நிதியத்திடம் உள்ள இருப்பு நிதி 1.60 கோடி டாலர் குறைந்து 360 கோடி டாலராக உள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் (2019-20), ஏப்ரல் 1 முதல் டிசம்பர் 3 வரையிலான காலத்தில் ரிசர்வ் வங்கியின் அன்னிய செலாவணி கையிருப்பு 3,880 கோடி டாலர் உயர்ந்தது. இதனையடுத்து முதல் முறையாக இவ்வங்கியின் அன்னிய செலாவணி கையிருப்பு 45,000 கோடி டாலரை தாண்டியது. தற்போது 47,000 கோடி டாலரை தாண்டி இருக்கிறது.