இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. தமிழில் பிரபுதேவா நடித்த மிஸ்டர் ரோமியோ படத்தில் கதாநாயகியாக நடித்ததுடன் பிரபுதேவாவுக்கு இணையாக நடனம் ஆடி கவர்ந்தவர். தமிழில் நிறையப் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அடுத்து விஜய்யுடன் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார்.
மீண்டும் இந்திக்கே திரும்பிச் சென்றார். ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ்குந்தரா மீது வெளிநாட்டு வாழ் இந்தியவர் சச்சின் ஜோஷி என்பவர் மும்பை போலீசில் ஒரு புகார் அளித்திருக்கிறார்.
ஷில்பா ஷெட்டி அறிவித்த, ஐந்து வருடம் தவணை முறையில் பணம் கட்டினால் 5 வது வருடத்தில் ஒரு கிலோ தங்கம் வழங்கும் திட்டத்தில் சேர்ந்திருந்தேன். 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுவரை பணம் செலுத்தி வந்தேன். 5 வருட முடிவில் தங்கம் பெறுவதற்காக வந்தபோது அவர் நடத்தி வந்த நிறுவனம் மூடப் பட்டிருக்கிறது.
இதுபற்றி விசாரித்தபோது அந்த நிறுவனத்திலிருந்து ஷில்பா ராஜினாமா செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த திட்டத்தில் 18.58 லட்சம் கட்டினேன். என்னிடம் ஷில்பா ஷெட்டி நகை திட்டத்தில் மோசடி செய்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறப்பட்டிருக்கிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர்.