சென்னை
பத்தாம் வகுப்பு தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு பஸ்வசதி செய்து தரப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் ஜூன் 1 முதல் 12 வரை நடைபெற உள்ளது. தள்ளிவைக்கப்பட்ட பிளஸ் 1 தேர்வு ஜூன் 2 லும், மார்ச் 24 ல் நடந்த பிளஸ் 2 தேர்வில் பங்கேற்காத 37 ஆயிரம் மாணவர்களுக்கு ஜூன் 4ல் தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா நெருக்கடி நிலை மாறி இயல்பு நிலை திரும்பிய பிறகே பத்தாம் வகுப்பு தேர்வுகளை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இந்நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளதாவது:
தேர்வு மையத்திற்கு வரும் மாணவர்கள் எந்த பகுதியில் இருந்தாலும், அவர்களை அழைத்து வருவதற்கும், தேர்வு முடிந்த பிறகு மீண்டும் அந்த பகுதிகளில் சென்று விடுவதற்கும் பஸ் வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதற்கான ஏற்பாடுகள் வகுப்பறைகளில் செய்யப்படுகிறது. மாணவர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து தேர்வுக்கு வர வேண்டும் என கேட்டு கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.