Friday, April 26, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
HomeUncategorized"ஆம்பன் புயல்" நாளை மாலை கரையை கடக்கிறது - தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

“ஆம்பன் புயல்” நாளை மாலை கரையை கடக்கிறது – தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை

மேற்குவங்கம் – வங்கதேசம் இடையே நாளை மாலை ஆம்பன் (Amphan) புயல் கரையை கடக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த சனிக்கிழமை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. பின்னர் இது, புயலாக உருவெடுத்து, வடக்கு நோக்கி நகர்ந்தபடி உள்ளது. இது மேலும் வலுவடைந்து தற்போது சூப்பர் புயலாக மாறியுள்ளது. அதாவது மணிக்கு 230 கி.மீ வேகத்தில் காற்று வீசும் அளவுக்கு வலுவான புயல் இது. புயல், அரபிக் கடலில் இருந்து குளிர்மையான காற்றை இழுக்கிறது. எனவே, தென் கர்நாடகா, வடக்கு கேரளா, வட தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பரவலாக மழை பதிவானது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது: மேற்கு வங்கம்- வங்கதேசம் இடையே, நாளை மாலை ஆம்பன் புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அது கூறியது. முன்னதாக, “அம்பன் இப்போது ஒரு ‘சூப்பர் சூறாவளி’ என்ற நிலைக்கு மாறியுள்ளது. இது ஒரு தீவிரமான புயலாகும், இந்த அளவுக்கு வலுவான ஒரே புயல் இதற்கு முன்பு ஒடிசாவில் 1999ம் ஆண்டு பதிவானது. அது மிகவும் ஆபத்தானது” என்று தேசிய பேரிடர் பதிலளிப்பு படை டி.ஜியான, எஸ்.என். பிரதான் தெரிவித்துள்ளார்.

சென்னை வானிலை ஆய்வு மையம் மேலும் கூறுகையில், சேலம் அணைக்கட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அரூர், காவேரிபாக்கம், பாப்பிரெட்டிப்பட்டியில் தலா 2 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

அடுத்த 24 மணி நேரத்தில், கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம், சென்னையில், வானம் மேக மூட்டத்துடன் இருக்கும். கடல் சீற்றத்தோடு இருக்கும் என்பதால், மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

மேற்கு வங்க கடற்கரையிலிருந்து 650 கி.மீ தொலைவில் தற்போது ஆம்பன் புயல் நிலை கொண்டுள்ளது. மத்திய வங்கக் கடல், மேற்கு வங்கக் கடல் பகுதி கொந்தளிப்போடு காணப்படும். நாளை புயல் கரையை கடக்கும்போது அதன் பாதிப்பு மேற்கு வங்கம் மட்டுமின்றி, ஒடிசாவிலும் இருக்க கூடும் என்பதால், தேசிய பேரிடர் மீட்பு படையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். பல லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments