கடந்த 1993 ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்கு மூளையாகச் செயல்பட்ட நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானில் இருந்த படி கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
தாவூத் இப்ராஹிம் எங்கள் நாட்டில் இல்லை என மறுத்து வந்த பாகிஸ்தான், இப்போது கராச்சியில் தாவூத் இருப்பதாக முதன் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.
பாகிஸ்தான் அரசு, சர்வதேச நிதி நடவடிக்கை குழுவிடம், எங்கள் நாட்டில் செயல்படும் 88 தீவிரவாத தலைவர்களுக்கு தடை விதித்துள்ளோம் எனக் குறிப்பிட்டு, அவர்கள் யார் ? யார்? என்ற பட்டியலையும் அளித்துள்ளது. இந்த பட்டியலில் தாவூத் இப்ராஹிம் பெயரும் இடம் பெற்றுள்ளது.
கராச்சியில் தாவூத் வசிப்பதாக அந்த பட்டியலில் குறிப்பிட்டுள்ள பாகிஸ்தான், தாவூத் வசிக்கும் மூன்று வீடுகளின் முகவரியையும், சர்வதேச நிதி நடவடிக்கை குழுவிடம் அளித்துள்ளது.
கராச்சியில் தாவூத் இப்ராஹிம் வசிப்பதை பாகிஸ்தான் ஒப்புகொண்டுள்ள நிலையில், அவரை உடனடியாக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஷா நவாஸ் உசேன் வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தானில் தாவூத் இப்ராஹிம் வசிப்பது அங்குள்ள மக்கள் அனைவருக்கும் தெரியும். கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு அவரது மகளை திருமணம் செய்து கொடுத்துள்ளார். அங்கு இருந்த படி இப்போதும் இந்தியாவில் தினமும் குற்ற நடவடிக்கைகளை அரங்கேற்றி வருகிறார். எனவே தாவூத் இப்ராஹிமை பாகிஸ்தான், இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என ஷா நவாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.