துபாய்,
13-வது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு துபாயில் நடந்த 19 வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
பெங்களூரு அணியில் வயிற்று வலி காரணமாக ஆடம் ஜம்பாவும் மற்றும் குர்கீரத் மான் சிங்கும் சேர்க்கப்படவில்லை. அவர்களுக்கு பதிலாக மொயீன் அலி, முகமது சிராஜ் ஆகியோர் இடம் பிடித்தனர். டெல்லி அணியில் காயம் காரணமாக போட்டி தொடரில் இருந்து விலகிய அமித் மிஸ்ராவுக்கு பதிலாக அக்ஷர் பட்டேல் சேர்க்கப்பட்டார்.
‘டாஸ்’ ஜெயித்த பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி, டெல்லி அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். முதலில் பேட் செய்த டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரிலேயே உதனா பந்து வீச்சில் பிரித்வி ஷா 3 பவுண்டரிகள் விளாசி அமர்க்களமாக ரன் வேட்டையை தொடங்கினார்.
யுஸ்வேந்திர சாஹல் ஓவரில் பிரித்வி ஷா ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் தூக்கினார். அவருக்கு பக்கபலமாக ஷிகர் தவானும் அடித்து ஆடினார். பவர்பிளேயில் (முதல் 6 ஓவரில்) அந்த அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் சேர்த்தது.
அணியின் ஸ்கோர் 68 ரன்னாக இருந்த போது பிரித்வி ஷா 42 ரன்னில் (23 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) முகமது சிராஜ் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டிவில்லியர்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து நேர்த்தியாக ஆடிக் கொண்டிருந்த ஷிகர் தவான் 32 ரன் (28 பந்து 3 பவுண்டரி) எடுத்த நிலையில் உதனா பந்து வீச்சில் மொயீன் அலியிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். கடந்த ஆட்டத்தில் அரைசதம் அடித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்து கலக்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (11 ரன், 13 பந்து, ஒரு பவுண்டரி) மொயீன் அலி பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து ஏமாற்றம் அளித்தார். அவர் அடித்த பந்தை பவுண்டரி எல்லைக் கோட்டில் தேவ்தத் படிக்கல் அருமையாக கேட்ச் செய்து அசத்தினார்.
அப்போது அணியின் ஸ்கோர் 11.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 90 ரன்னாக இருந்தது. இதைத்தொடர்ந்து மார்கஸ் ஸ்டோனிஸ், ரிஷாப் பண்டுடன் ஜோடி சேர்ந்தார். மார்கஸ் ஸ்டோனிஸ் அதிரடி காட்டினார். அவர் மொயீன் அலி வீசிய ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரியும், நவ்தீப் சைனி ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரியும் தெறிக்க விட்டார். ரிஷாப் பண்டும் தன் பங்குக்கு நவ்தீப் சைனி ஓவரில் சிக்சர், பவுண்டரி விரட்டினார். இதனால் நடுவில் சரிந்த ரன் விகிதம் மீண்டும் வேகமாக உயர்ந்தது.
19-வது ஓவரில் முகமது சிராஜ் நோ-பாலாக வீசிய முதல் பந்தில் ரிஷாப் பண்ட் சிக்சர் தூக்கி அசத்தினார். ஆனால் அந்த ஓவரிலேயே ரிஷாப் பண்ட் 37 ரன்னில் (25 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) போல்டு ஆனார். அடுத்து ஹெட்மயர் களம் இறங்கினார். அபாரமாக ஆடிய மார்கஸ் ஸ்டோனிஸ் பவுண்டரி விரட்டி அரைசதத்தை தாண்டினார். நடப்பு தொடரில் அவர் அடித்த 2-வது அரைசதம் இதுவாகும்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. மார்கஸ் ஸ்டோனிஸ் 26 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 53 ரன்களும், ஹெட்மயர் 7 பந்துகளில் ஒரு சிக்சருடன் 11 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பெங்களூரு அணி தரப்பில் முகமது சிராஜ் 2 விக்கெட்டும், உதனா, மொயீன் அலி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் 197 ரன் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தன. தேவ்தத் படிக்கல் 4 ரன்னிலும், ஆரோன் பிஞ்ச் 13 ரன்னிலும், டிவில்லியர்ஸ் 9 ரன்னிலும், மொயீன் அலி 11 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். சற்று நேரம் நிலைத்து நின்று போராடிய கேப்டன் விராட்கோலி 39 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 43 ரன்கள் எடுத்த நிலையில் ரபடா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அத்துடன் அந்த அணியின் நம்பிக்கையும் கரைந்து போனது.
20 ஓவர்களில் பெங்களூரு அணி 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களே எடுத்தது. இதனால் டெல்லி அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி தரப்பில் ரபடா 4 விக்கெட்டும், அக்ஷர் பட்டேல், நோர்டியா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
5-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணி 4-வது வெற்றியை ருசித்து புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. 5-வது ஆட்டத்தில் விளையாடிய பெங்களூரு அணிக்கு இது 2-வது தோல்வியாகும்.